ஜெர்மனுக்கு ஜப்பானின் அதிர்ச்சி; கொஸ்டாரிகாவை துவம்சம் செய்த ஸ்பெயின்

200

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியொன்றில் ஜப்பான் அணி பலம் மிக்க ஜெர்மனியை வீழ்த்த, ஸ்பெயின் அணி கொஸ்டாரிகாவை துவம்சம் செய்தது.

புதன்கிழமை இடம்பெற்ற அனைத்து போட்டிகளினதும் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்.

அஹமட் பின் அலி அரங்கில் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (24) அதிகாலை நடைபெற்ற போட்டியில் உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் சற்று தடுமாற்றம் கண்டது. 11ஆவது நிமிடத்தில் கனடாவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற அந்த அணியின் நட்சத்திர வீரர் அல்பொன்சோ டேவிஸ் தவறினார்.

வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா அடிக்கடி பெல்ஜியம் கோல் பகுதியை ஆக்கிரமித்தது. எனினும் 44ஆவது நிமிடத்தில் பட்சுவாயி எதிரணியின் இரு பின்பகள வீரர்களை முறியடித்து நீண்ட தூரம் ஓடிவந்து பந்தை பெற்று கோலாக மாற்றினார்.

எனினும் கனடா அணி சில வாய்ப்புகளை தவறவிட்டதன் மூலம் மற்றொரு அதிர்ச்சித் தோல்வியை எதிர்கொள்வதை பெல்ஜியம் தவிர்த்துக்கொண்டது.

கொஸ்டாரிகாவை துவம்சம் செய்த ஸ்பெயின்

கொஸ்டாரிகா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் துவம்பசம் செய்து ஸ்பெயின் அணி உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்துள்ளது.

அல் துமாமா அரங்கில் E குழுவுக்காக புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் அரம்பம் தொடக்கம் கடைசி வரை ஸ்பெயின் இடைவிடாது கோல்களை புகுத்தி வலுவான ஆரம்பத்தை பெற்றது.

சர்ச்சையின் விளைவு; மன்செஸ்டர் யுனைடட்டில் இருந்து வெளியேறும் ரொனால்டோ

மத்திய கள வீரர் டானி ஒல்மோ 11ஆவது நிமிடத்தில் முதல் கோலை புகுத்தியதோடு அது ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தில் பெறும் 100ஆவது கோலாகவும் சாதனை படைத்தது.

பத்து நிமிடங்கள் கழித்து எதிரணி பெனால்டி பெட்டிக்குள் சென்ற மார்கோ அசன்சியோ, ஜோர்டி அல்பா பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார். தொடர்ந்து பெர்ரன் டொர்ரஸ் 31 மற்றும் 54 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் புகுத்தினார்.

உலகக் கிண்ணத்தில் ஸ்பெயினை பிரதிநிதித்துவப் படுத்தும் இளம் வீரர் என்ற சாதனையுடன் களமிறங்கிய 18 வயதுடைய காவி, 74ஆவது நிமிடத்தில் அபார கோல் புகுத்தினார். இதன்மூலம் 1958 உலகக் கிண்ணத்தில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு பின் உலகக் கிண்ணத்தில் கோல் பெற்ற மிக இளம் வயதினராக காவி சாதனை படைத்தார்.

தொடர்ந்து பதில் வீரர்களாக வந்த கார்லொஸ் சோலர் மற்றும் மொரோட்டா ஆகியோரும் கோல் புகுத்த ஸ்பெயின் அணி எந்த நெருக்கடியும் இன்றி மூன்று புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

கடைசி நேர கோல்களால் ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணி நான்கு முறை உலக சம்பியனான ஜெர்மனியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

கலீபா சர்வதேச அரங்கில் E குழுவுக்காக புதன்கிழமை (23) நடைபெற்ற போட்டியில் பெரும்பாலான நேரம் பந்து ஜெர்மனியின் பக்கம் இருந்தபோதும் அதனால் ஆதிக்கம் செலுத்த முடியாமல்போனது.

பதில் வீரராக வந்த டகுமா அசானோ ஜெர்மனி பின்கள வீரர்களை சமாளித்து பந்தை எடுத்துச் சென்று வலைக்குள் செலுத்தியதன் மூலம் ஜப்பான் அணி 83 ஆவது நிமிடத்தில் வைத்து 2-1 என முன்னிலை பெற்றது. இதனால் போட்டி முடிவதற்கு எஞ்சி இருந்த 14 (7 மேலதிக நிமிடங்கள்) நிமிடங்களில் ஜெர்மனி பதில் கோல் புகுத்த அவசரம் காட்டியபோதும் அது வெற்றி அளிக்கவில்லை.

முன்னதாக மன்செஸ்டர் சிட்டியின் இல்காய் குன்டொகன் 33ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி ஜெர்மனியை முன்னிலை பெறச் செய்தார். எனினும் 75 ஆவது நிமிடத்தில் பதில் வீரராக வந்த ரிட்சு டோன் பதில் கோல் திருப்பினார்.

சவூதி அரேபியாவிடம் ஆர்ஜன்டீனா அதிர்ச்சித் தோல்வி அடைந்த மறு தினத்தில் ஜெர்மனிக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய இரு போட்டிகளும் தீர்க்கமானதாக மாறியுள்ளது. ஜெர்மனி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினை சந்திக்கவுள்ளது.

2018 உலகக் கிண்ணத்தில் ஜெர்மனி குழு நிலை போட்டிகளுடன் வெளியேறிய நிலையில் அந்த நிலை மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க போராட வேண்டி உள்ளது.

மொரோக்கோகுரோஷியா போட்டி கோலின்றி சமன்

கடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோஷியா இம்முறை உலகக் கிண்ணத்தில் மொரோக்கோவுக்கு எதிரான தனது முதல் போட்டியை கோலின்றி சமநிலை செய்துள்ளது.

ஆர்ஜன்டீனாவுக்கு பேரதிர்ச்சி; நடப்பு சம்பியனுக்கு இலகு வெற்றி

அல் பைத் அரங்கில் F குழுவுக்காக புதன்கிழமை (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் 2018 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற குரோஷிய அணியின் நான்கு வீரர்கள் மாத்திரமே இம்முறை இடம்பெற்றிருந்தனர். மந்தமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய குரோஷியா சார்பில் நிகொலஸ் விளாசியக்கின் கோல் முயற்சி ஒன்று நூலிழையில் தவறியது.

எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொரோக்கோ தெளிவான கோல் வாய்ப்புகளைப் பெறத் தவறியது.

உலகத் தரவரிசையில் 12 ஆவது இடத்தில் இருக்கும் குரோஷியா போட்டியின் பெரும்பாலான நேரம் பந்தை தன் வசம் வைத்திருந்தபோதும் மொரோக்கோ அரணை முறியடித்து கோல் வாய்ப்புகளை பெறுவதில் தோல்வி அடைந்தது.

எனினும் மொரோக்கோ அணி கடந்த மூன்று ஆண்டுகளில் விளையாடிய 40 போட்டிகளில் இரு போட்டிகளில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இம்முறை உலகக் கிண்ணத்தில் கோலின்றி சமநிலையாகும் மூன்றாவது போட்டியாக இந்த ஆட்டம் பதிவாகியுள்ளது. முன்னதாக டென்மார்க் – துனீசியா மற்றும் போலந்து – மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இவ்வாறு சமநிலையுற்றன.

கடந்த 2018 இல் ரஷ்யாவில் நடந்த ஒட்டுமொத்த உலகக் கிண்ண போட்டிகளிலும் ஒரே ஒரு ஆட்டமே கோலின்றி சமநிலையுற்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<