பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஜெர்மனி

175

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) கூட்டுறவு கிண்ணத்தை (Fifa confederations cup) வென்ற உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி, பிஃபா வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.    

கூட்டுறவு கிண்ண தொடருக்கு முன்னர் ஜெர்மனி அணி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிலி அணியை வீழ்த்தி முதல் முறை கூட்டுறவுக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி, தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு வந்தது. இதனால் பிரேஸில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் முறையே 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டன.

முதற்தடவையாக கூட்டுறவு கிண்ண சம்பியனாக முடிசூடிய ஜேர்மனி

முதற்தடவையாக கூட்டுறவு கிண்ண சம்பியனாக முடிசூடிய ஜேர்மனி

கால்பந்தாட்ட உலகக் கிண்ண சம்பியன்களான ஜேர்மனி அணியானது, 2017 ஆம் ஆண்டிற்கான பிபா …

 இதற்கு முன் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மனி முதலிடத்தில் இருந்தது. அதற்கு பின் பிரேஸில், ஆர்ஜன்டீனா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய சிறந்த ஆட்டங்களின் காரணமாக, தரவரிசையில் முன்னேறி முதலிடத்தைப் பிடித்திருந்தன.

கூட்டுறவு கிண்ணத்தில், மெக்சிக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி இந்தப் புதிய தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பேரோ தீவுகளை வீழ்த்திய சுவிட்சர்லாந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியும் நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் வீழ்த்தப்படாத அணியாக இருக்கும் போலந்தும் நான்கு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது அந்த அணி தரவரிசையில் பெறும் சிறந்த தரநிலையாகும்.

எனினும் கூட்டுறவு கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சிலி, மூன்று இடங்கள் வீழ்ச்சி கண்டு 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கொலம்பியா, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் முறையே 8, 9 மற்றும் 10 ஆவது இடங்களில் காணப்படுகின்றன.

ஆசிய அணிகளில் ஈரான் முன்னிலையில் உள்ளது. அந்த அணி தரவரிசையில் 24 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

ஆசிய சம்மேளன சம்பியன்ஷிப் தொடரிற்கான இலங்கை இளையோர் குழாம் அறிவிப்பு

ஆசிய சம்மேளன சம்பியன்ஷிப் தொடரிற்கான இலங்கை இளையோர் குழாம் அறிவிப்பு

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களிற்கான …

 எவ்வாறாயினும் பிஃபாவின் இந்த தரவரிசையில் அதி கூடிய இடங்கள் முன்னேறிய அணியாக தென்மேற்கு ஐரோப்பாவின் அன்டோர்ரா காணப்படுகிறது. அந்த அணி 57 இடங்கள் முன்னேறி 129 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில் இலங்கை அணி எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து 197 ஆவது இடத்திலேயே உள்ளது. அந்த அணியின் தரநிலை புள்ளிகள் 34 ஆகவே நீடிக்கிறது. மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் இந்திய அணி 341 புள்ளிகளுடன் 96ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிஃபா தரவரிசை பட்டியல் மீண்டும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி புதுப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய தரப்படுத்தல்

நிலை அணி புள்ளிகள்
1 ஜெர்மனி 1609
2 பிரேசில் 1603
3 அர்ஜென்டினா 1413
4 போர்த்துக்கல் 1332
5 சுவிட்சர்லாந்து 1329
6 போலந்து 1319
7 சிலி 1250
8 கொலம்பியா 1208
9 பிரான்ஸ் 1199
10 பெல்ஜியம் 1194