முதற்தடவையாக கூட்டுறவு கிண்ண சம்பியனாக முடிசூடிய ஜேர்மனி

176
Chile v Germany
REUTERS

கால்பந்தாட்ட உலகக் கிண்ண சம்பியன்களான ஜேர்மனி அணியானது, 2017 ஆம் ஆண்டிற்கான பிபா கூட்டுறவு கிண்ண (Fifa confederations cup) கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சிலி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தொடரில் முதற்தடவையாக சம்பியன் பட்டத்தினை சுவீகரித்துள்ளது.

ரஷ்யாவின் சென். பீட்டர்ஸ்பக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற இந்தப் போட்டியில், களமிறங்கியிருந்த ஜேர்மனி அணியானது முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில், மெக்ஸிகோ அணியினரை 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியிருந்தது. அதே போன்று, சம்பியன் ஆகும் கனவுடன் இறுதி ஆட்டத்தில் நுழைந்திருந்த மற்றைய அணியான சிலி, பெனால்டி மூலம் போர்த்துக்கல் அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்திருந்தது.

முதல் சில நிமிடங்களில் உற்சாகத்துடன் செயற்பட்டிருந்த சிலி அணியினர் போட்டியின் ஆதிக்கத்தினை தமதாக்கியிருந்தனர்.

தொடர்ந்து சிலி அணியினர் பின்களத்தில் மேற்கொண்டிருந்த தவறு ஒன்றினை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட, லார்ஸ் ஸ்டின்ட்ல் ஜேர்மனி அணிக்காக முதல் கோலினை 20 ஆவது நிமிடத்தில் பெற்றுத்தந்தார்.

இரண்டாம் பாதியில், பந்தின் ஆதிக்கம் சிலி அணியிடமே காணப்பட்டிருந்தது. எனினும், அவர்களால் கிடைத்த வாய்ப்புக்களை கோல்களாக மாற்றிக்கொள்ள முடியவில்லை.

அதேபோன்று, போட்டியின் இறுதிப் பத்து நிமிடங்களிலும் சிலி அணியினர் அழுத்தத்தை பிரயோகித்து கோலொன்றினைப் பெற்று போட்டியை சமநிலைப்படுத்த முயற்சித்திருந்தனர். எனினும், அவர்களது முயற்சிகள் அனைத்தும் வீணாகியிருந்தது.

முழு நேரம்: ஜேர்மனி 1 – 0 சிலி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

போட்டியின் மேலதிக நிமிடங்களில் கிடைக்கப்பெற்ற பெனால்டி கோலொன்றின் உதவியுடன், விறுவிறுப்பாக நடைபெற்றிருந்த பிபா கூட்டுறவு கிண்ணத் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில், மெக்ஸிகோ அணியினரை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றுக்கொண்டது.

இரு அணிகளும் முதல் பாதியில் பாரிய முயற்சி செய்திருந்த போதிலும், இரு அணிகளாலும் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.

இரண்டாம் பாதியில் போர்த்துக்கல் வீரர் லூயிஸ் நேட்டோ துரதிஷ்டவசமாக எதிரணிக்கு ஓவ்ன் கோலொன்றினைப் (Own Goal) பெற்றுக்கொடுத்தார். இதனால், மெக்ஸிகோ அணி 1-0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.  

போட்டியின் இறுதி வரை இரு அணிகளாலும் மேலதிக கோலொன்றினைப் பெற முடியாது காணப்பட்டிருந்தது. இந்நிலையில் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில், பின்கள வீரர் பெப்பே 91 ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்காக முதல் கோலினைப் பெற போட்டி சூடு பிடிக்கத்தொடங்கியது.

இவ்வாறாக போட்டி விறுவிறுப்பான முறையில் சென்று கொண்டிருந்த நிலையில் 104 ஆவது நிமிடத்தில், கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பொன்றின் மூலம் கோலினைப் பெற்ற அண்ட்ரே சில்வா போர்த்துக்கல் அணியை வெற்றியாளர்களாக மாற்றினார்.

முழு நேரம்: போர்த்துக்கல் 2 – 1 மெக்ஸிகோ