நான் இலங்கை அணிக்கு ஆடுவேன் என்ற போது அனைவரும் சிரித்தனர் – சங்கக்கார

88

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருக்கும் குமார் சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருப்பதோடு கழக அணிகளில் ஒன்றான NCC இற்கும் கடந்த இரண்டு தசாப்தங்களாக உள்ளூர் போட்டிகளில் ஆடியிருக்கின்றார்.

பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய ஆபிப் ஹொசைன்

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட்….

இவ்வாறான நிலையில் NCC அணி, குமார் சங்கக்காரவினை கெளரவிக்கும் விஷேட நிகழ்வு ஒன்றினை நேற்று (5) அவர்களது சொந்த மைதானத்தில்  ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. 

இந்த நிகழ்வில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பெற்ற சுவாரசிய சம்பவங்களை நினைவுபடுத்தும் விடயங்கள் சிலவற்றை குமார் சங்கக்கார பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

குமார் சங்கக்கார NCC அணியில் இணைந்து விளையாடியதே, அவர் இலங்கை தேசிய அணியில் இணைந்து மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மாற முக்கிய காரணமாக அமைந்திருந்தது.  அந்தவகையில் குமார் சங்கக்கார, NCC அணியில் முதல் தடவையாக இணையும் போது எப்படியான ஒரு நிலை அங்கே காணப்பட்டது என்பது தொடர்பில் தனது கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்திருந்தார். 

”திறமை, ஆற்றல்களின் அடிப்படையில் நோக்கினால் நான் இங்கே (NCC அணிக்கு) வரும் போது மிகவும் மோசமாக இருந்தேன். அப்போது எனது வயதுப்பிரிவில் வேறு சிலரே சிறந்த வீரர்களாக இருந்தனர். எனினும், இவ்வாறான வீரர்களுடன் இணைந்து கொண்டதே நான் விரும்பிக்கொண்ட சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தது.”

மேலும் பேசிய குமார் சங்கக்கார, ”(NCC அணியில்) எனது வயதுப்பிரிவில் உள்ள வீரர்கள் தங்களை ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதில் தயக்கம் காட்டமாட்டர்கள். ஒரு தடவை நாம் அனைவரும் எங்களது  எதிர்காலத்திட்டங்கள் பற்றிக் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒவ்வொருவரும் இலங்கை அணியின் தேசிய கிரிக்கெட் அணிக்கு ஆடுவதே தங்களது இலட்சியம் எனக் கூறினர். நானும் இலங்கை அணியில் ஆடுவதுதான் எனது இலட்சியமும் எனக் கூறினேன். அப்போது நான் சிறந்த வீரர்களில் ஒருவனாக இல்லாத காரணத்தினால் என்னை சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர். எனது முடிவை சற்று மீள் பரீசிலிக்குமாறு பணித்தனர். ஆனாலும், அதிர்ஷ்டம் கைகொடுக்க நான் இலங்கை அணியில் ஆடினேன். இப்படியான (அனைத்து விடயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும்) நட்புக்கள் (NCC அணியில்) கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான வியடம்.” என NCC அணியில் தனக்கு கிடைத்த நண்பர்கள் வெளிப்படையானவர்கள் என்பது தொடர்பில்  குறிப்பிட்டார்.

குமார் சங்கக்கார NCC அணியில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வருவதற்கு எடுத்துக் கொண்ட தனது பயிற்சிகள் தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இதன் போது, NCC அணியில் வீரர்கள் பயிற்றுவிக்கப்படும் விதம் மிகவும் தனித்துவமானது எனத் தெரிவித்த அவர் இங்கே உள்ள வீரர்கள் பயிற்சிகள் எடுத்த பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும் ஆடாது போனாலும் வீடு செல்லும் போது ஒரேநிலையில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என கூறியிருந்தார். 

இலங்கை வீரர்களுக்கு மின்னொளியில் அதிக பயிற்சி கொடுங்கள் – மாலிங்க

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு….

இதேநேரம், இலங்கை அணி உருவாக்கிய சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அரவிந்த டி சில்வாவே, NCC அணியில் இருக்கும் போது சிறந்த வகையிலான துடுப்பாட்டத்தை மேற்கொள்ள, தான் துடுப்பாட்ட மட்டை பிடிக்க வேண்டிய நுட்பங்களை கற்றுத் தந்ததாகவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.

அரவிந்த டி சில்வா தவிர தான் இலங்கை அணியில் விளையாடிய மற்றுமொரு வீரரான ரசல் ஆர்ணொல்டிடம் NCC அணியில் இருக்கும் போது வேறு சில பயிற்சிகளை பெற்றுக் கொண்டதாக தெரிவித்திருந்தார். 

அதோடு, NCC அணியில் தான் இருந்தபோது பெற்றுக் கொண்ட மேலதிக பயிற்சிகள் பற்றியும்  விபரித்திருந்த குமார் சங்கக்கார, தான் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<