சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து ஜாம்பவான் ரூனி

207
Image Courtesy - Getty Image
 

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் பெற்ற வீரரான வேய்ன் ரூனி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணி அடுத்த மாதம் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடவிருக்கும் நிலையிலேயே ரூனி உடன் அமுலுக்கு வரும் வகையில் புதன்கிழமை (23) தனது ஓய்வை அறிவித்தார்.

மோல்டா மற்றும் ஸ்லோவாக்கியா அணிகளுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கு ரூனியை மீண்டும் அணிக்கு அழைப்பது குறித்து இங்கிலாந்து அணி முகாமையாளர் கரெத் சவுத்கேட் முயற்சித்த நிலையில் தொலைபேசியின் ஊடாக தான் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுப்பதாக ரூனி குறிப்பிட்டுள்ளார்.  

புதிய தோற்றத்தில் கட்டாரில் கால்பந்து மைதானம்

விளையாட்டு உலகின் மிகவும் பிரபல்யமிக்க விளையாட்டாக விளங்குகின்ற கால்பந்து…

தற்பொழுது 31 வயதான ரூனி, இங்கிலாந்து அணிக்காக 119 போட்டிகளில் பங்கேற்று அதிகபட்சமாக 53 கோல்களைப் பெற்றுள்ளார். எனினும், அண்மைக்காலத்தில் அவர் தேசிய அணியில் தலைமை பொறுப்பை இழந்ததோடு குழாமில் தனது இடத்தையும் பறிகொடுத்தார்.  குறிப்பாக, கடந்த ஜுன் மாதத்தில் ஸ்கொட்லாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

கடந்த பருவகாலத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணியில் ஒரு வெளிப்புற வீரராக இருந்த ரூனி, தற்போது தனது புதிய அணியான எவர்டனுக்காக சிறப்பாக ஆடி வருகிறார். அவர் பிரீமியர் லீக்கின் இரண்டு போட்டிகளிலும் எவர்டன் அணிக்காக கோல் அடித்து உற்சாகத்துடன் உள்ளார்.

இந்நிலையில் ரூனி புதனன்று வெளியிட்ட ஊடக அறிவிப்பில் கூறியதாவது,

கரெத் சவுத்கேட் இந்த வாரம் என்னை தொலைபேசியில் அழைத்து இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஆடும் படி கோரியது மிகச் சிறப்பானதாகும். அதனை நான் உண்மையில் வரவேற்கிறேன். எனினும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என்ற முடிவை நான் கரெத்துக்கு கூறினேன். நான் இது பற்றி ஏற்கனவே நினைத்திருந்தேன் என்றார்.

இங்கிலாந்து அணி வரும் செப்டம்பர் முதலாம் திகதி மோல்டாவில் அவ்வணியை எதிர்த்தும், மூன்று நாட்களின் பின் சொந்த மண்ணில் ஸ்லோவாக்கியாவுக்கு எதிராகவும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து குழாம் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும்.  

எனினும் தனது சிறுவயது அணியான எவர்டனில் மீண்டும் இணைந்த ரூனி, இரண்டு தினங்களுக்கு முன் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான 1-1 என சமநிலையான போட்டியில் தனது 200 ஆவது பிரமியர் லீக் கோலை பெற்றுக்கொண்டார்.    

அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர்

உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் தொடர்களில் ஒன்றான..

அந்த போட்டிக்குப் பின்னர், தான் சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் அழைக்கப்படுவதை விடவும் எவர்டன் அணியில் தனது திறமையை காட்டுவதற்கே அதிக அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  

எனினும் மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக 559 போட்டிகளில் விளையாடி இருக்கும் வெயின் ரூனி மொத்தம் 253 கோல்களை பெற்றுள்ளார். இதுவே அந்த அணிக்காக வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய கோல்களாகும்.

ரூனி 2003ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியதே அவரது முதல் சர்வதேச போட்டியாகும். அது தொடக்கம் அவர் மூன்று உலகக் கிண்ணங்கள் மற்றும் மூன்று ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

எனினும், சர்வதேச அளவில் அவருக்கு இங்கிலாந்து அணிக்காக கிண்ணம் வென்று கொடுக்க முடியாமல் போனது. அவரது சிறந்த பெறுபேறு 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியதாகும்.