ஆசிய கிண்ணம் வென்ற மங்கைகளை கௌரவித்த ஈவினை சமூகம்

723

இலங்கை தேசிய வலைப்பந்து அணியினை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக பிரதிநிதித்துவம் செய்து வரும் யாழ்ப்பாணம் ஈவினையினை சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இவருடன் இணைந்து  5ஆவது தடவையாக ஆசிய கிண்ணம் வென்ற வலைப்பந்து அணியில் இடம்பிடித்திருந்த எழிலேந்தினி சேதுகாவலர் ஆகியோர் ஈவினை சமூகத்தினரால் அண்மையில் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் கிண்ணம் இலங்கை அணிக்கு

சிங்கப்பூரின் OCBC அரங்கில் இன்று (9)…

உலகின் சிறந்த சூட்டர் (Shooter) விருதினை 2011ஆம் ஆண்டிலேயே தம்வசப்படுத்தியிருந்த தர்ஜினி, அடுத்த வருடம்  இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இடம்பெறவுள்ள 15ஆவது வலைப்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரிலும் சிறந்த பெறுதியினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண தொடரில் தோல்வியேதுமின்றி  இலங்கை அணி வெல்வதற்கு தர்ஜினியின் பங்கு மிக முக்கியமானதாகவிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், தர்ஜினியின் கிராமத்தினர் தமது கிராமத்தின் அடையாளமாக திகழும் தர்ஜினி மற்றும் அவருடைய இடத்தினை நிரப்ப வல்லவர் என எதிர்பார்க்கப்படும் இளைய வீராங்கனை எழிலேந்தினி ஆகியோரினை கௌரவித்து மகிழ்வித்திருந்தனர்.

மாணிக்க தியாகநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விற்கு முருகேசு சுலோச்சனா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில், மதகுருமார், யாழ் மாவட்ட வலைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் மனோன்மணி, விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், கிராம வாசிகள் என பல தரப்பட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Photos: Felicitation of Tharjini Sivalingam by her village society

ThePapare.com | Ushanth Senthilselvan | 25/12/2018 Editing and re-using images without permission of ThePapare.com…

நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினர் “விழா எடுத்து தர்ஜினியை பாராட்டுவது அவரினை பெருமைப்படுத்துவது என்பதனை விடவும், அவரினை கௌரவிப்பது என்பது எமக்கு பெருமை. அதுவே உண்மை.” என தெரிவித்தார்.

“தர்ஜினி ஆரம்ப காலங்களில் செய்த பல்வேறு தியாகங்களே, அவரை உயர்த்தியது. தாய், தந்தையினை காணாது பல ஆண்டுகளாக கொழும்பில் வசித்துள்ளார். வேற்றுக் கலாச்சாரம், வேற்றுமொழி பேசும் இடத்தில் அவர் தனது திறமையினை வெளிப்படுத்தி, உலகறிந்த வீராங்கனையாக இருப்பது எமக்கு பெருமை.

அவரது இறைபக்தி, ஒழுக்கம் என்பனவே அவரது வெற்றியின் ரகசியங்கள், இவற்றிற்கும் மேலாக அவர் மிகச் சிறந்த அணி வீராங்கனை.”

ஊரிலோ, பாடசாலையிலோ தனக்குரிய வாய்ப்புக்களினை துரதிஷ்டவசமாக பெறாத தர்ஜினி தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நேர்த்தியாக பயன்படுத்தி உயர்ந்திருக்கின்றார். “ என அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் ஏற்புரை ஆற்றிய தர்ஜினி “தனக்கு கிடைத்த பாராட்டு வைபவங்களிலேயே, தனது மண்ணில் இடம்பெற்ற இந்த பாராட்டு வைபவம் மனதிற்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. அதிலும் குறிப்பாக, எனது தாய் தந்தையரிற்கு நான் விளையாடிய எந்தவொரு போட்டியையோ அல்லது பங்கெடுத்த விழாக்களினையோ நேரடியாக காணும் சந்தர்ப்பம் எட்டவில்லை. இன்று அவர்கள் எதிரே இவ்விழா இடம்பெற்றிருப்பதால், இது எனக்கு மிகுந்த மனநிறைவினை தரும் ஒரு நிகழ்வாகும்.“

“ஆசிய கிண்ணம் வென்று நாம் இலங்கை திரும்பிய போது, எம்மிருவரையும் வரவேற்பதற்கு ஒருவர் கூட வரவில்லை. ஏனைய அத்தனை மாகாணங்களும் தமது வீரர்களை கௌரவித்து, கொண்டாடியிருந்தன. ஆனால், எம்மை வரவேற்பதற்கு கூட எவரும் வந்திராதது எனக்கு மிகுந்த மனவேதனையழித்திருந்தது.” என தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

“நான் விளையாடுகின்ற சகல அணிகளினையும் நேசித்தே விளையாடுகின்றேன், நேசித்தால் மட்டுமே வெற்றிக்காக விளையாட முடியும், வெற்றியடையவும் முடியும்.”

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் இலங்கை ஏ குழுவில்

இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த வருடம்…

“எங்களுடைய மாவட்டத்தில் இதுவரை காலமாக உள்ளக விளையாட்டரங்கொன்று அமையப்பெறவில்லை. இது எங்கள் மாவட்டத்திலுள்ளள திறமையான வீர, வீராங்கனைகளை தேசிய தரத்திலிருந்து தொலைவிலேயே வைத்திருக்கின்றது. புற் தரையில் விளையாடுவதற்கும், உள்ளளக அரங்கில் விளையாடுவதற்கும் வேறுபாடு இருக்கின்றது. வெகு விரைவில் எமது மாவட்டத்திலும் ஓர் உள்ளக அரங்கினை அமைப்பதற்கு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் விரைந்து செயற்படுவார்கள் என தான் எதிர்பார்க்கின்றேன்” எனவும் தர்ஜினி தெரிவித்தார்.

தர்ஜினி இளையவர்களினை நோக்கி

“தொடர்ந்தும் விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் பங்கெடுக்க வேண்டும். அவர்களை எம்மவர்கள் அனைரும் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டை நேசித்தால் வெற்றி நிச்சயம்.” என விளையாட்டுத்துறையில் ஈடுபாட்டினை அதிகரிக்குமாறு வேண்டியதோடு, தனது இளவயது முதல் இன்று வரை தான் எதிர் கொண்ட சவால்கள் மற்றும் கடந்து வந்த பாதையினை கசப்பாகவும், இனிப்பாகவும் பகிர்ந்திருந்தார்.

இலங்கை வலைபந்தாட்டத்தின் அடையாளமாக விளங்கும் தர்ஜினி மற்றும் அண்மையில் தேசிய உடையினை அணித்திருக்கும் எழிலேந்தினி ஆகியோரது எதிர்காலம் மேலும் சிறக்க Thepapare.com இன் வாழ்த்துக்கள்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<