ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் கிண்ணம் இலங்கை அணிக்கு

1191
Image courtesy: Netball Singapore

சிங்கப்பூரின் OCBC அரங்கில் இன்று (9) நடைபெற்று முடிந்திருக்கும், 11ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மைதானச் சொந்தக்காரர்களான சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை 69-50 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருக்கும் இலங்கை வலைப்பந்து அணி ஆசிய வலைப்பந்து தொடரின் சம்பியனாக 5ஆவது முறை நாமம் சூடியுள்ளது.

தோல்வியுறாத அணியாக ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை

11 ஆவது முறையாக நடைபெற்று வரும் ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில், ஹொங்கொங் வலைப்பந்து அணியை …

இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைபெற்று வரும் இந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில், நடப்புச் சம்பியன் மலேசியாவினை தோற்கடித்த சிங்கப்பூர் அணியும், ஹொங்கொங் அணியினை தோற்கடித்த இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

ஆசியாவில் முதல் நிலை வலைப்பந்து அணிகளில் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூர் அணி, இந்த வலைப்பந்து தொடரின் கிண்ணப் பிரிவுக்காக, முன்னர் இடம்பெற்ற போட்டியொன்றில் இலங்கை வலைப்பந்து அணியுடன் தோல்வியுற்றிருந்த அதேவேளை ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரிற்கு முன்னதாக இந்த ஆண்டின் நடுப் பகுதியில் இலங்கையில் நட்புரீதியாக இடம்பெற்ற அழைப்பு வலைப்பந்து தொடரிலும் இலங்கையிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்தது.

இவ்வாறான தோல்விகளால், இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கமே இறுதிப் போட்டியிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சொந்த மைதான அனுபவங்களோடு சிங்கப்பூர் வலைப்பந்து அணி இறுதிப் போட்டியின் முதல் கால் பகுதியினை 16-16  என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கையுடன் சமநிலை செய்தது.

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டத்துடன் இலங்கை வலைப்பந்து அணி, 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணப்…

போட்டியின் இரண்டாம் கால் பகுதியில் விரைந்து செயற்பட்ட இலங்கை வலைப்பந்து அணி சார்பாக தர்ஜினி சிவலிங்கம் முதல் புள்ளியினை பெற்று தனது அணியின் புள்ளிகள் வேட்டையை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இரண்டாம் கால் பகுதியில் சிறந்த தாக்குதலை வெளிப்படுத்திய இலங்கை வலைப்பந்து அணி, இந்த கால் பகுதியிலும் முதல் கால் பகுதி போன்று 16 புள்ளிகளை மொத்தமாக எடுத்தது. எனினும், மைதான சொந்தக்காரர்களால் 10 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது.

இதன்படி, போட்டியின் முதற் பாதி இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கத்தோடு 32-26 என நிறைவுற்றது.

முதல் பாதி: இலங்கை 32-26 சிங்கப்பூர்

மூன்றாம் கால் பகுதியின் புள்ளிகள் நுழைவாயிலை சிங்கப்பூர் திறந்து வைத்த போதிலும், இலங்கை வலைப்பந்து அணி தமது அசுர ஆட்டத்தினை இந்த கால் பகுதியிலும் தொடர்ந்தது. இலங்கை வலைப்பந்து அணிக்காக சத்துரங்கி ஜயசூரிய விரைவான பந்துப் பரிமாற்றங்கள் மூலம் புள்ளிகள் பெறுவதில் உதவ இலங்கை அணி போட்டியின் மூன்றாம் கால் பகுதியில் 18 புள்ளிகளை எடுத்தது.

இதேவேளை, சிங்கப்பூர் 12 புள்ளிகளை மாத்திரமே பெற குறித்த பகுதி ஆட்டம் 50-38 என்கிற புள்ளிகள் கணக்கில் இலங்கையின் முன்னிலையுடன் நிறைவுற்றது.

தொடர்ந்து போட்டியின் நான்காம் கால் பகுதியிலும் தமது ஆதிக்கத்தை முன்னெடுத்த இலங்கை வலைப்பந்து அணி, 19 புள்ளிகளை பெற்றதுடன் சிங்கப்பூர் 12 புள்ளிகளை மட்டுமே இறுதி கால் பகுதியில் எடுத்தது.

இதன்படி 69-50 என்கிற புள்ளிகள் கணக்கில் இறுதிப் போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி வெற்றி பெற்றதுடன், ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் புதிய சம்பியன்களாகவும்   மாறியது.

முழு நேரம் :  இலங்கை 69-50 சிங்கப்பூர்

கடந்த ஆண்டுகளில் பல்வேறு சரிவுகளை சந்தித்த இலங்கை வலைப்பந்து அணி, புதிய பயிற்சியாளர் திலகா ஜினதாசவின் ஆளுகைக்கு உட்பட்டு குறுகிய காலத்திற்குள் மேற்கொண்ட கடின பயிற்சிகள் மற்றும் அனுபவ வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின் அணிக்கான மீள் வருகை என்பவற்றின் மூலம் சிறந்த மாற்றம் கண்டு ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் புதிய சம்பின்களாக நாமம் சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

<<<இறுதிப் போட்டியைப் பார்வையிட>>>