துபாயில் அதிரடி காட்டிய சமரி அத்தபத்து

1577

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும் பெயார்பிரேக் (FairBreak) T20 தொடரின் முதல் போட்டியில், வோரியர்ஸ் வுமன் (Warriors Women) அணியினை பேல்கோன்ஸ் வுமன் (Falcons Women) அணி சமரி அத்தபத்துவின் அதிரடி சதத்தோடு 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>FairBreak T20 தொடரில் களமிறங்கும் சமரி அத்தபத்து

பாலின சமத்துவத்தினை (Gender Equality) வலியுறுத்தும் நோக்கோடு பெயார்பிரேக் (FairBreak) T20 தொடரானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் போட்டி நேற்றைய தினம் (04) ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பேல்கோன்ஸ் அணியின் தலைவி சூஸி பேட்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வோரியர்ஸ் வுமன் அணிக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய வோரியர்ஸ் வுமன் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது. வோரியர்ஸ் வுமன் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஜோர்ஜியா ரெட்மேய்ன் 61 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காது காணப்பட, ஹெய்லி மெதிவ்ஸ் 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் பேல்கோன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சொர்னரின் டிப்போச் மற்றும் மேரிகோ ஹில் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>LPL பணிப்பாளர் ராஜினாமா; புதிய பணிப்பாளர் நியமனம்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 178 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பேல்கோன்ஸ் அணிக்கு இலங்கை வீராங்கனையான சமரி அத்தபத்து அதிரடியான சதம் ஒன்றினைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து இந்த சதத்தின் உதவியோடு பேல்கோன்ஸ் வுமன் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களுடன் அடைந்தது.

பேல்கோன்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த சமரி அத்தபத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததோடு வெறும் 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மறுமுனையில் பேல்கோன்ஸ் வுமன் அணித்தலைவி சூஸி பேட்ஸ் முதல் விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களை சமரி அத்தபத்துவுடன் இணைந்து பகிர்ந்திருந்த நிலையில், 43 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வோரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஹெய்லி மெதிவ்ஸ் மற்றும் ஈஷா ஓசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்வீதம் கைப்பற்றியிருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகியாகவும் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

வோரியர்ஸ் வுமன் – 177/2 (20) ஜோர்ஜியா ரெட்மெய்னே 80(61)*, ஹெய்லி மெதிவ்ஸ் 58(35)

பேல்கோன்ஸ் வுமன் – 178/2 (18.4) சமரி அத்தபத்து 107(55)*, சூஸி பேட்ஸ் 60(43)

முடிவு – வோரியர்ஸ் வுமன் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<