அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள்

320

கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு இத்தாலியின் ஏ.எஸ். ரோமா கழகத்தில் இருந்து பிரேசில் வீரர் அலிசன் பெக்கரை லிவர்பூல் கழகம் வாங்கியுள்ளது. கோல்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பரிமாற்றக் கட்டணங்கள் பற்றி இனி பார்ப்போம்.

ப்ரீமியர் லீக் உட்பட பெரும்பாலான உடன்படிக்கைகள் இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருக்கின்றன. யூரோ நாணயத்தில் மில்லியன்களாலான அந்தப் பட்டியல் கீழ்வருமாறு,

1. அலிசன் பெக்கர் – 73 மில்லியன் யூரோ (ரோமாவில் இருந்து லிவர்பூல்,  2018)

பிரேசில் கழகமான இன்டர்நேசனலில் மூன்று ஆண்டுகள் திறமையை வெளிப்படுத்திய அலிசன் அந்த கழகம் கேம்பியனோடோ கவுச்சோ சீரி A1 தொடரை தொடர்ந்து நான்கு ஆணடுகள் வெல்ல உதவினார். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு அவரை ரோமா கழகம் வாங்கியது.

கோல்காப்பாளர் ஒருவருக்கான அதிக தொகையை பெற்ற பியான்லிக் பப்போனின் 16 ஆண்டு சாதனையை முறியடித்து அலிசனை வாங்க லிவர்பூல் முன்வந்தது. அண்மையில் முடிவுற்ற பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அவர் பிரேசில் அணிக்காக சோபித்திருந்தார்.

பிரான்ஸின் உலகக் கிண்ண வெற்றியில் குடியேறிய சமூகத்தின் பங்களிப்பு

ரோமா அணிக்காக அலிசன் எந்த கிண்ணமும் வெல்லாதபோதும் இத்தாலியில் விளையாடிய காலத்தில் அவரது சாதனைகள் லிவர்பூல் ரசிகர்களுக்கு உற்சாகம் தருவதாக உள்ளது. 2017/18 இல் ஐரோப்பாவின் 5 லீக்குகளிலும் அலிசன் இரண்டாவது சிறந்த கோல் தடுப்பாளராக உள்ளார். 80.1% உடன் உள்ள அவர் அட்லெடிகோ மெட்ரிட்டின் ஜான் ஒப்லக்கிற்கு மாத்திரமே பின்னிற்கிறார்.   

2017/18 சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிகபட்சமாக அலிசன் ரோமா கழகத்திற்கு 47 கோல் தடுப்புகளை செய்துள்ளார். இதன் மூலம் அந்த அணி தொடரின் அரையிறுதி வரை முன்னேற உதவினார். 2017/18 பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் குழாமிலும் அவர் இடம்பெற்றார்.     

சீரி A1 தொடரில் அலிசன் 17 போட்டிகளில் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார். இது இந்த தொடரில் இரண்டாவது சிறந்த கோல்காப்பாகும். அதேபோன்று அவர் பிரேசில் அணிக்காக 30 போட்டிகளில் 20 இல் எதிரணிக்கு எந்த கோலும் விட்டுக்கொடுக்கவில்லை.   

2. கியான்லிக் பப்போன் (Gianluigi Buffon) – 52.8 மில்லியன் யூரோ (பார்மாவில் இருந்து ஜுவாண்டஸ், 2001)

2001 ஆம் ஆண்டு பார்மா கழகத்தில் இருந்து ஜுவாண்டஸ் கழகத்தால் 52.8 மில்லியன் யூரோவுக்கு பப்போன் வாங்கப்பட்டபோது, கோல்காப்பாளர் ஒருவர் இத்தனை விலைக்கு வாங்கப்படுவது அதுவரை அறியப்படாத ஒன்றாகவே இருந்தது.

23 வயதாக இருந்த பப்போன் இத்தாலியின் பார்மா கழகத்திற்கு 2000/01 பருவத்தில் அபார திறமையை வெளிக்காட்டி அந்த அணி சீரி A1 தொடரில் 4ஆவது இடத்தை பிடிக்க உதவினார். அதேபோன்று கோப்பா இத்தாலி தொடரில் அந்த அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.

2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கோல்காப்பாளர் மட்டுமல்ல எந்த ஒரு வீரருக்கும் செலவிடப்பட்ட அதிக தொகையாக இது இருந்ததோடு, அந்த விலைக்கு ஏற்ப பப்போன் தனது திறமையை வெளிப்படுத்தி ஜுவாண்டஸ் அணியில் 17 ஆண்டுகள் ஆடினார். இதன்போது அந்த அணி 10 தடவைகள் சீரி A1 தொடரை வென்றதோடு கோப்பா இத்தாலியை 5 முறைகளும், சுப்பர் கிண்ணத்தை 6 தடவைகளும், சம்பியன்ஸ் லீக்கில் 6 தடவைகள் இரண்டாவது இடத்தையும் பெற்றது.   

இத்தாலி உலகக் கிண்ணத்தை வென்ற அதே 2006 ஆம் ஆண்டு  ஜுவாண்டஸ் அணி ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கியது இத்தாலி கால்பந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த அணி சீரி B க்கு தரமிறக்கப்பட்டது.  

எவ்வாறாயினும் அந்த அணியின் ஏனைய முன்னணி வீரர்கள் போலன்றி பப்போன் இரண்டாம் தரத்திலும் கூட ஜுவாண்டஸ் அணியில் நீடித்தார். எனினும் சீரி B தொடரை வென்ற அந்த அணி அடுத்த பருவத்திலேயே தரமுயர்த்தப்பட்டது. அணி தரமிறக்கப்பட்டிருந்தபோதும் அந்த அணியில் இருந்து வெளியேறாமல் நிலைத்திருந்த பப்போன், ஜுவாண்டஸ் கழக வரலாற்றில் ஆதரவாளர்களிடம் அதிக அன்பை பெற்ற வீரராக மாறினார்.

3. எடர்சன் மொராஸ் – 40 மில்லியன் யூரோ (பென்பிகாவில் இருந்து மன்செஸ்டர் சிட்டி, 2017)

சாவோ போலோவின் அதிக நம்பிக்கை தரும் இளம் வீரராக இருந்த எடர்சன் போர்த்துக்கல்லின் இரண்டாவது தரத்தின் ரிபிராவோ கழகத்தில் இணைந்தார். அந்த கழகத்தில் 3 பருவங்கள் ஆடிய அவர் மிகப்பெரிய நகர்வாக எஸ்.எல். பெனிபிகாவுடன் இணைந்தார்.

உலகக்கிண்ணத்தின் மிகச்சிறந்த கோலுக்கான விருதை வென்ற பென்ஜமின் பவார்ட்

பெனிபிகாவில் எடர்சனின் கடைசி பருவத்தில் (2016/17) அந்த அணி லீக் மற்றும் கிண்ணம் இரண்டையும் வெல்ல உதவிய அவர், மன்செஸ்டர் கழக முகாமையாளர் பெப் கார்டியோலாவினால் ஈர்க்கப்பட்டார். இது ப்ரீமியர் லீக்கில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அப்போது சாதனை படைக்க காரணமானது.

பந்தை வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் திறமை மிக்கவராக எடர்சன் பார்க்கப்படுகிறார். அவர் பந்தை கட்டுப்படுத்தி பதில் தாக்குதல் ஒன்றை தொடுக்கும் வகையில் பந்தை வழங்குவதில் பிரசித்தமானவர்.   

கார்டியோலாவின் ஆட்ட பாணிக்கு பொருத்தமானவராக எடர்சன் செயற்பட அது அந்த அணி ப்ரிமியர் லீக் பட்டத்தை இலகுவாக வெல்ல உதவியது.

4. ஜோர்டன் பிக்போர்ட் – 34 மில்லியன் யூரோ (சண்டர்லான்ட்டில் இருந்து எவர்டன், 2017)

சண்டர்லான்ட் அணி 2016/17 பருவ ப்ரிமியர் லீக் தொடரில் மோசமாக ஆடி பின்தள்ளப்பட்டபோதும், பிக்போர்ட் அந்த அணியில் திறமையை காட்டிய ஒருசில வீரர்களில் ஒருவர். அவர் அந்த பருவத்தில் இரண்டாவது அதிக கோல் தடுப்புகளை செய்த வீரராவார். அவர் மொத்தம் 135 கோல் தடுப்புகளை செய்தார்.  

எவர்டன் 34 மில்லயின் யூரோவுக்கு அவரை வாங்கியபோது பலரும் இமைகளை உயர்த்திப் பார்த்தனர். ஆனால் பிக்போர்ட் தான் பெறுமதியானவன் என்பதை நிரூபித்து எவர்டன் பின்னடைவை சந்தித்த பருவத்திலும் சோபித்தார்.

இந்த சந்தர்ப்பத்தை தனது பெயரை மிளிரச் செய்வதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். இதன் மூலம் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியின் முதல் நிலை கோல்காப்பாளராக அவர் தேர்வானார்.  

அவரது இணைப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதும், பிக்போர்ட் மீண்டும் ஒருமுறை அந்த சவாலுக்கு சிறப்பாக முகம்கொடுத்து ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்காக போட்டியை வெல்லும் பல கோல் தடுப்புகளையும் செய்து காட்டினார்.

5. மனுவேல் நோயர் – 30 மில்லியன் யூரோ (எப்.சி. ஸ்சல்க் 04 இல் இருந்து பெயர்ன் முனிச், 2011)

பெயர்ன் கழகம் 30 மில்லியன் யூரோ என்ற பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யும் முன்னர் நோயர் ஐந்து ஆண்டுகள் ஸ்சல்க் கழகத்தில் கழித்தார். இந்த தொகைக்கு அவர் பேரம் பேசப்பட்டது சரியே என்பதை நிரூபிக்கும் வகையில் அபார திறமையை வெளிக்காட்டிய நோயர் உலகின் மிகச் சிறந்த கோல்காப்பாளராக மாறினார். கழக மட்டத்தில் பெயர்ன் முனிச் வெற்றிகளை குவிக்க அவர் தன்னாளான அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தினார்.  

ஜெர்மனியின் பிரதான கோல்காப்பாளராக மாறிய அவர் 2014 இல் ஜெர்மனி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியபோது அவர் தங்கக் கையுறையை வென்றார்.

பெனால்டி எல்லைக்குள் எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராகவும், பந்துகளை தடுக்கும் திறமையாலும் ‘ஸ்வீப்பர் கீப்பர்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறார். பெனால்டி எல்லைக்கு வெளியே தயக்கமின்றி வந்து சவால் விடக்கூடியவராகவும் அவர் உள்ளார்.

6. பிரான்சிஸ்கோ டோல்டோ – 26.5 மில்லியன் யூரோ (பியோரன்டினாவில் இருந்து இன்டார் மிலான், 2001)

அந்த காலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரர்களில் ஒருவராக டோல்டோ இடம்பிடித்தார். பியோரன்டினாவில் எட்டு ஆண்டுகள் இருந்த அவர் கோப்பா இத்தாலியாவை இரண்டு தடவைகளும் சுப்பர்கோப்பா இத்தாலியானாவை ஒருமுறையும் வெல்ல உதவினார். இதனைத் தொடர்ந்தே அவர் இன்டர் மிலான் அணியால் வாங்கப்பட்டார்.

விரக்தியுடன் திடீர் ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி வீரர் ஓசில்

பெரும் தொகைக்கு ஒப்பந்தமான டோல்டோ இன்டர் மிலானில் 9 ஆண்டுகள் கழித்தார். இதன்போது அவர் அந்தக் கழகத்திற்காக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கை 2010 ஆம் ஆண்டு வென்றதோடு சீரி A தொடரை ஐந்து தடவைகளும் கிண்ணத்திற்கான பட்டத்தை ஆறு தடவைகளும் வென்றார்.

தனது கழகத்தில் இருந்து இன்டர் மிலானுக்கு சென்றபோதும் பியோரன்டினா கழகம் தனது கௌரவத்திற்குரிய வீரராக அவரை இணைத்ததோடு அந்த அணியின் அனைத்து காலத்திற்குமான பதினொரு வீரர்கள் அணியிலும் அவரை உள்ளடக்கியது.

7. டேவிட் டி கீ – 25 மில்லியன் யூரோ (அட்லடிகோ மெட்ரிட்டில் இருந்து மன்செஸ்டர் யுனைடட், 2011)

எட்வின் வான் டர் செர்ருக்கு பதில் சேர் அலெக்ஸ் பெர்குசனால் டீ கீ வாங்கப்பட்டபோது 20 வயது வீரருக்கு அது பெரும் தொகையாக இருந்தது. தனது பெரும் தொகைக்கு ஏற்ப திறமையை வெளிக்காட்டுவதில் அவர் கடும் போராட்டத்தை சந்தித்தார்.

சில ஆண்டுகள் பின்தங்கி இருந்தபோதும் சேர் அலெக்சின் நம்பிக்கையை வீணடிக்காமல் தற்போது சிறப்பாக ஆடும் டி கீ கடந்த சில பருவங்களாக ப்ரீமியர் லீக்கின் சிறந்த கோல்காப்பாளராக இருந்து வருகிறார். உலகின் சிறந்த கோல்காப்பாளரான மனுவேல் நோயரின் கௌரவத்தை இவர் தட்டிப்பறிப்பார் என்று பலரும் நம்புகின்றனர்.

மன்சஸ்டருக்காக ப்ரீமியர் லீக், எப்.ஏ. கிண்ணம் மற்றும் லீக் கிண்ணத்தை ஒருமுறை வென்றிருக்கும் டி கீ 2016/17 பருவத்தில் அந்த அணிக்காக ஐரோப்பிய லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

8. பெர்ன்ட் லெனோ – 25 மில்லியன் யூரோ (பெயர்ன் லெவர்கூசனில் இருந்து ஆர்சனல், 2018)

லெவர்கூசனில் குறிப்பிடும்படியாக திறமையை வெளிப்படுத்திய லெனோ ஆர்சனல் முகாமையாளராக யுனை எமரி பொறுப்பேற்ற பின் அந்த அணியில் ஒப்பந்தம் செய்த முதல் வீரர்களில் ஒருவராவார்.

பெயர்ன் லெவர்கூசன் அணியில் 7 ஆண்டுகள் கழித்த லெனோ அந்த கழகத்திற்காக 200 இற்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். எனவே ஆர்சனலின் முதல் நிலை கோல்காப்பாளரான பீட்டர் கெச்சின் இடத்தை அவர் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சனல் ரசிகர்களுக்கு லெனோ மீதான எதிர்பார்ப்புகள் அதிகம்.  

2017 பிஃபா கொன்படரேசன் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி அணியில் பெர்ன்ட் லெனோவும் இடம்பெற்றார்.

9. அலெக்ஸ் மெரட் – 22 மில்லியன் யூரோ (யுடினசேயில் இருந்து நபோலி, 2018)

ஏ.சி. மிலான் கழகத்திற்கு சென்ற பெபே ரெய்னாவுக்கு பதில் தற்போதைய வீரர் பரிமாற்றத்தில் S.P.A.L.  கழகத்தில் இருந்து 21 வயது மெரட்டை நபோலி அணி வாங்கியது. எனினும் கழகத்திற்காக தனது முதல் பயிற்சி முகாமிலேயே கையில் முறிவு ஏற்பட்ட நிலையில் அந்த 21 வயது வீரரின் திறமையை பார்ப்பதற்கு நபோலி ரசிகர்கள் சற்று காலம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

10. செபஸ்டியன் பிரெய் – 21 மில்லியன் யூரோ (இன்டர்நெசினலில் இருந்து பர்மா, 2001)

வெளியேறும் கிகி பப்போனுக்கு பதில் பர்மா அணியால் வாங்கப்படுவதற்கு முன்னர் மூன்று ஆண்டுகள் இன்டர் மிலானில் கழித்தார். எனினும் ஐந்து ஆண்டுகள் பர்மா அணிக்காக ஆடிய பிரெய் அந்த அணிக்காக தனது முதல் பருவத்திலேயே கோப்பா இத்தாலியை வென்றார்.

அதிக விலைபோன ஏனைய வீரர்கள்

  • அங்கேலோ பெருசி – 19 மில்லியன் யூரோ (ஜுவாண்டஸ் – இன்டர்நெசினல், 1999)
  • கிளவ்டியோ ப்ராவோ – 18 மில்லியன் யூரோ (பார்சிலோனா – மன்செஸ்டர் சிட்டி, 2016)
  • செஸ்பர் சிலசன் – 15 மில்லியன் யூரோ (அஜக்ஸ் – பார்சிலோனா, 2016)
  • ஜான் ஒப்லக் – 15 மில்லியன் யூரோ (பென்பிகா – அட்லடிகோ மெட்ரிட், 2014)
  • பெட்ர் செச் – 10 மில்லியன் யூரோ (செல்சி – ஆர்சனல், 2015)

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<