செல்சி, டொட்டன்ஹாமுக்கு அடுத்தடுத்து வெற்றி

163

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது வார போட்டிகள் சனிக்கிழமை ஆரம்பமாகின. இதில் இரண்டு முக்கிய போட்டிகளின் முடிவுகள் வருமாறு,

செல்சி எதிர் ஆர்சனல்

பின்கள வீரர் மார்கோஸ் அலொன்சோ போட்ட திரில் கோல் மூலம் ஆர்சனல் அணியுடனான போட்டியில் செல்சி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றி ஒன்றை பெற்றது.

ThePapare.com: பிரீமியர் லீக் முதல் வாரத்தின் சிறந்த வீரர்

ThePapare.com பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் (1) – ரிசாலிசன் இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின்…

இதன்மூலம் இம்முறை பிரீமியர் லீக் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று செல்சி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருப்பதோடு, புதிய முகாமையாளரான யுனய் எமரியின் கீழ் ஆர்சனல் கழகம் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்திலேயே பெட்ரோ மூலம் முதல் கோலை பெற்ற செல்சி அணி 20ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று வலுவான நிலையை அடைந்தது.  

ஸ்பெயினின் முன்கள வீரர் அல்வாரா மொராட்டா நேர்த்தியான முறையில் பந்தை எடுத்துச் சென்று செல்சி அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

எனினும் சுதாகரித்து ஆடிய ஆர்சனல் முதல் பாதி முடிவதற்குள்ளேயே பதில் கோல்களை திருப்பியது. ஹென்ரிக் கிடாரியன் 37 ஆவது நிமிடத்திலும், அலெக்ஸ் ஆவோபி 41 ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் பெற முதல் 45 நிமிடத்தில் போட்டி 2-2 என சமநிலைக்கு வந்தது.

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெரும் இழுபறி நீடித்தது. மேலதிக வீரராக களம் கண்ட பெல்ஜியத்தின் நட்சத்திரம் ஈடன் ஹசார்ட் பந்தை அபாரமாக பரிமாற்ற அதனை பெற்று 81 ஆவது நிமிடத்தில் அலொன்சோ செல்சி அணிக்கு வெற்றி கோலை புகுத்தினார்.

பிரீமியர் லீக்: நடப்புச் சம்பியன் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு உறுதியான வெற்றி

உலகின் முன்னணி கால்பந்து தொடர்களில் ஒன்றான இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை…

தொடர்ச்சியான இரு வெற்றிகளைப் பெற்றுள்ள செல்சி, அடுத்து ஓகஸ்ட் 26 ஆம் திகதி நியூகாஸ்ட்ல் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு ஆர்சனல் தனது சொந்த மைதானத்தில் வரும் சனிக்கிழமை (25) வெஸ்ட் ஹாம் அணியை எதிர்கொள்ளும்.  

டொட்டன்ஹாம் ஹொட்புர் எதிர் புல்ஹாம்

ஓகஸ்ட் மாதத்தில் கோல் பெற தடுமாறி வந்த ஹரி கேன் முதல் கோலை பெற, முதல்தர லீக்கிற்கு தகுதி உயர்வு பெற்ற புல்ஹாம் அணியை டொட்டன்ஹாம் 3-1 இலகுவாக வென்றது.

இதன்மூலம் டொட்டன்ஹாம் அணி தனது முதல் இரு பிரீமியர் லீக் போட்டிகளிலும் வெற்றியீட்டியதோடு மேற்கு லண்டனை தளமாகக் கொண்ட புல்ஹாம் ஆரம்ப இரு போட்டிகளிலும் தோற்று பின்தள்ளப்பட்டுள்ளது.

தனது புதிய மைதானம் இன்னும் தயாராகாத நிலையில் டொட்டன்ஹாம் லண்டன் வெம்ப்லி அரங்கை தற்காலிக தளமாகக் கொண்டே ஆடி வருகிறது. இங்கு சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டொட்டன்ஹாம் 43 ஆவது நிமிடத்தில் கோல் பெற்று முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. லூகாஸ் மௌரா அந்த கோலை பெற்றார்.

எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே புல்ஹாம் பதில் கோல் கிடைத்தது. 52 ஆவது நிமிடத்தில் ரியான் செசக்னொன் பரிமாற்றிய பந்தை அலெக்சாண்டர் மிட்ரோவின் நெருங்கிய தூரத்தில் இருந்து வலைக்குள் செலுத்தினார்.   

இந்நிலையில் போட்டி முடிவை நெருங்கும் வேளையில் 74 ஆவது நிமிடத்தில் கீரம் ட்ரிப்பியர் 24 யார்ட் தூரத்தில் இருந்து உதைத்து அழகான பிரீ கிக் கோல் ஒன்றை பெற்று டொட்டன்ஹாம் அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இங்கிலாந்து அணித் தலைவரான ஹரி கேன் டொட்டன்ஹாம் அணிக்கு மற்றொரு கோலை பெற அந்த அணியின் வெற்றி உறுதியானது. எரிக் லமேலா கடத்திய பந்தை பெனால்டி எல்லையின் இடது மூலையில் இருந்து பெற்ற ஹரி கேன் அதனை லாவகமாக வலைக்குள் தட்டிவிட்டார்.

கடந்த மாதம் முடிவுற்ற உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்று தங்கப்பாதணியை வென்ற ஹரி கேன், இந்த மாதத்தில் முன்னர் நடந்த 14 போட்டிகளிலும் எந்த கோலும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க