இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் இரத்து

163
Gallo Images

மருத்துவக் காரணங்களைக் கருத்திற் கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

Video – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் விளையாடும் அனுபவத்தை கூறும் வியாஸ்காந்த்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பற்றில் ஆட தென்னாபிரிக்க மண்ணுக்கு பயணமாகியிருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் தொடர் கடந்த 04ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. 

எனினும், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் கடந்த 04ஆம் திகதி ஆரம்பமாக இருந்த இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதேவேளை 06ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியதனால் குறித்த நாளில் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இரத்துச் செய்யப்பட்டது. 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (7) இடம்பெறவிருந்தது. ஆனால், இந்த போட்டியும் கைவிடப்பட்டு தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணமும் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. 

கொவிட்-19 வைரஸினால் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி

இந்த சுற்றுப்பயணம் இரத்துச் செய்யப்பட்டிருப்பது இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகளின் ஒப்புதல்களின் அடிப்படையில் என்றே தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளியிட்டியிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம், கொவிட்-19 வைரஸ் வீரர்களின் மனநிலையில் தாக்கங்களை உருவாக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலும் இந்த சுற்றுப்பயணம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக காரணங்கள் வெளியாகியிருக்கின்றன. 

இந்த ஒருநாள் தொடர் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் இருக்கின்ற ஒரு தொடராக அமைவதால் இந்த தொடரினை நடாத்துவதற்கான வேறு ஒரு திகதியினை தீர்மானிக்க இரண்டு நாட்டு கிரிக்கெட் சபைகளும் தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் கொவிட்-19 வைரஸ் காரணமாக இரத்துச் செய்யப்பட்டதனை அடுத்து தென்னாபிரிக்க மண்ணுக்கு அடுத்ததாக கிரிக்கெட் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவுள்ள இலங்கை, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றன.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<