டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி

167
Getty Images

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியினர் 269 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியுள்ளனர். 

ரிச்சட்ஸ்-போத்தம் கிண்ணமாக மாற்றமடையும் விஸ்டன் கிண்ணம்!

கடந்த வெள்ளிக்கிழமை (24) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இங்கிலாந்து அணிக்கு வழங்கினார்.

.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்று டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்களுடன் மூன்றாவது போட்டி ஆரம்பமானது.

தொடர்ந்து போட்டியில் நாணய சுழற்சிக்கு அமைவாக தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இங்கிலாந்து அணியினர், 111.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 369 ஓட்டங்களை குவித்தனர்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஒல்லி போப், அவரது நான்காவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 91 ஓட்டங்களை குவித்தார். இதேநேரம், அரைச்சதங்கள் பெற்ற ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களையும், ஸ்டுவார்ட் புரோட் அதிரடியாக ஆடி 45 பந்துகளுக்கு 62 ஓட்டங்களையும், ரோரி பேன்ஸ் 52 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக, வேகப்பந்துவீச்சாளரான கேமர் ரோச் 4 விக்கெட்டுக்கள் சாய்க்க, ரொஸ்டன் சேஸ் மற்றும் ஷனோன் கேப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்

மறுமுனையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, 197 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

மேற்கத்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் ஜேசன் ஹோல்டர் 46 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸடுவார்ட் புரோட் வெறும் 31 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து அசத்தினார். 

“நோ போல்” பந்துகளை அவதானிக்கவுள்ள தொலைக்காட்சி நடுவர்!

தொடர்ந்து, 172 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியினர் 2 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தினர்

இங்கிலாந்தின் இம்முறைக்கான துடுப்பாட்டம் சார்பில், ரோரி பேன்ஸ் 90 ஓட்டங்கள் குவித்து போட்டியில் இரண்டாவது அரைச்சதம் பெற, டோம் சிப்லி 56 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஜோ ரூட் 68 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொஸ்டன் சேஸ் இங்கிலாந்து அணியில் பறிபோயிருந்த இரண்டு விக்கெட்டுக்களையும் தங்களிடையே தலா ஒன்று வீதம் பகிர்ந்தனர். 

இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 399 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

இதனை அடுத்து போட்டியின் நான்காம் நாள் நேற்று (27) மழை காரணமாக முழுமையாகக் கைவிடப்பட்ட நிலையில், இன்று (28) ஐந்தாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 129 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வியடைந்தனர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஷாய் ஹோப், 31 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். அதேநேரம், இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் தனது வேகத்தின் மூலம் 5 விக்கெட்டுக்களை கைப்பற்ற, தன்னுடைய 500ஆவது டெஸ்ட் விக்கெட்டினை இப்போட்டியில் பெற்ற ஸ்டுவார்ட் புரோட் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பினை சகலதுறைகளிலும் வழங்கியிருந்தார்

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவார்ட் புரோட் தெரிவு செய்யப்பட்டார். 

இதேநேரம், இங்கிலாந்து அணி இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்காக 40 புள்ளிகளைப் பெற்று, இந்த தொடருக்கான வழங்கப்படும் றிச்சர்ட்ஸ்-போத்தம் கிண்ணத்தினையும் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 369 (111.5) ஒல்லி போப் 91, ஜோஸ் பட்லர் 67, ஸ்டுவார்ட் புரோட் 62, ரோரி பேன்ஸ் 57, கேமர் ரோச் 72/4, ரொஸ்டன் சேஸ் 36/2, ஷனோன் கேப்ரியல் 77/2

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 197 (65) ஜேசன் ஹோல்டர் 46, ஸ்டுவார்ட் புரோட் 31/6, ஜேம்ஸ் அன்டர்சன் 28/2

இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 226/2d (58) ரோரி பேன்ஸ் 90, ஜோ ரூட் 68*, டோம் சிப்லி 56, ஜேசன் ஹோல்டர் 24/1

மேற்கிந்திய தீவுகள் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 129 (37.1) ஷேய் ஹோப் 31, கிறிஸ் வோக்ஸ் 50/5, ஸடுவார்ட் புரோட் 36/4

முடிவுஇங்கிலாந்து அணி 269 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<