தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து வசம்

70
PHOTO - GETTY IMAGES

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில், தென்னாபிரிக்க அணியை இங்கிலாந்து அணி 191 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. 

மேலும், இந்த வெற்றியோடு இங்கிலாந்து அணி, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. 

மகளிர் T20I உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஐசிசி மகளிர் T20I கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15……

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அங்கே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடுகின்றது.

முன்னர், இந்த டெஸ்ட் தொடரின் ஏனைய மூன்று போட்டிகளும் நிறைவுற்ற நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்க, தொடரின் நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (24) ஜொஹன்னஸ்பேர்க் நகரில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, தனது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார். 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 98.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 400 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதங்கள் பெற்ற ஸேக் க்ரோலி 66 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவர் ஜோ ரூட் 59 ஓட்டங்களையும், ஒல்லி போப் 56 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில், வேகப்பந்துவீச்சாளரான என்ரிட்ச் நோர்ட்ஜே 5 விக்கெட்டுக்கள் சாய்க்க, வெர்னன் பிலாந்தர் மற்றும் டேன் பெட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். 

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க வீரர்கள் 68.3 ஓவர்களில் 183 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பாக குயின்டன் டி கொக் 76 ஓட்டங்கள் குவித்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். 

இதேவேளை, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்ப்பந்துவீச்சாளரான மார்க் வூட் 5 விக்கெட்டுக்கள் எடுக்க, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றிருந்தனர். 

இதன் பின்னர், 217 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியினர், இம்முறை 248 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் இப்போட்டியில் இரண்டாவது முறையாக அரைச்சதம் கடந்த ஜோ ரூட், 5 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 58 ஓட்டங்கள் பெற்றார். அதேவேளை டொம் சிப்லி 44 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

இலங்கைக்கு எதிராக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு……

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில், இடதுகை வேகப்பந்துவீச்சாளரான பியுரன் ஹென்ரிக்ஸ் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக தென்னாபிரிக்க அணிக்கு, 466 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 77.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 274 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராடிய ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன் 15 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 98 ஓட்டங்கள் பெற்று சதத்தினை தவறவிட்டிருந்தார். 

அதேநேரம், இங்கிலாந்து அணிக்காக இம்முறையும் பந்துவீச்சில் அசத்திய மார்க் வூட் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்ய, பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுக்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். 

போட்டியின் ஆட்டநாயகன் விருது, இங்கிலாந்து அணிக்காக பந்துவீச்சில் அசத்திய மார்க் வூடிற்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதினை இங்கிலாந்து அணியின் சகலதுறைவீரரான பென் ஸ்டோக்ஸ் வென்றார். 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 3-1 எனக் கைப்பற்றியிருக்கும் இங்கிலாந்து அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக 90 புள்ளிகளைப் பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதேவேளை, இந்த டெஸ்ட் தொடரை அடுத்து இங்கிலாந்து – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 400 (98.2) – ஸேக் க்ரோலி 66, ஜோ ரூட் 59, ஒல்லி போப் 56, என்ரிச் நோர்ட்ஜே 110/5

தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 183 (68.3) – குயின்டன் டி கொக் 76, மார்க் வூட் 46/5

இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 248 (61.3) – ஜோ ரூட் 58, டொம் சிப்லி 44, பியுரன் ஹென்ரிக்ஸ் 64/5, என்ரிச் நோர்ட்ஜே 61/2

தென்னாபிரிக்கா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 274 (77.1) – ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் 98, மார்க் வூட் 54/4, ஸ்டூவார்ட் ப்ரோட் 26/2

முடிவு – இங்கிலாந்து அணி 191 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<