சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு

1239

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிதாக வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையின் படி, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நான்கு புள்ளிகளை இழந்த இலங்கை அணி 7வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

55 வருட வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு …

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையடுத்து, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையை ஐசிசி நேற்று (26) வெளியிட்டது. இதில் தொடரை 3-0 என இழந்த இலங்கை அணி நான்கு புள்ளிகளை இழந்து 7வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை அணி 97 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் தொடரை 3-0 என முற்றுமுழுதாக வைட்வொஷ் முறையில் இழந்த இலங்கை அணியின் புள்ளிகள் தற்பொழுது 93 ஆக உள்ளது. இதன் காரணமாக தரவரிசையில் 95 புள்ளிகளுடன் 7வது இடத்திலிருந்த பாகிஸ்தான் அணி 6வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதேநேரம், இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கு முன்னர் 106 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணியை விட ஒரு புள்ளி வித்தியாசத்தில் 3வது இடத்தை பிடித்திருந்தது. எனினும், தொடரின் நிறைவில் மேலும் 2 புள்ளிகளை பெற்று 108 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

அசந்த டி மெல் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் …

இதன்படி, தற்போதைய புதிய தரவரிசையின் படி இந்திய அணி (116 புள்ளிகள்) முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து அணி (108 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், தென்னாபிரிக்க அணி (106 புள்ளிகள்) மூன்றாவது இடம், அவுஸ்திரேலிய அணி (102 புள்ளிகள்) நான்காவது இடம் மற்றும் நியூசிலாந்து அணி (101 புள்ளிகள்) ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

எவ்வாறாயினும், இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர், இலங்கை அணி தொடரை கைப்பற்றியிருந்தால், சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<