6ஆவது 20க்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் சூப்பர்-10 சுற்று கடந்த திங்கட் கிழமை நிறைவு பெற்றது. இதன் முடிவில் குழு ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் குழு இரண்டில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிளும் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் நடப்பு சம்பியன் இலங்கை உட்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன. 

இந்த நிலையில் டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு 20க்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கேன் விலியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர் கொண்டது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயோன் மோர்கன் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகள் விபரம்,

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், கேன் வில்லியம்சன், கொலின் முன்ரோ, ரொஸ் டெய்லர், கொரி எண்டர்சன், க்ரான்ட் எலியட், லூக் ரொன்ச்சி , மிட்செல் சான்ட்னெர், இஷ் சோதி, மிட்செல் மெக்லேனகன், ஆடம் மிலேன்

இங்கிலாந்து அணி:

ஜேசன் ரோய் , அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோய் ரூட், இயோன் மோர்கன், ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் ஜோர்டன், அதில் ரஷீத், டேவிட் வில்லே, லியம் பிளங்கட்

நடுவர்கள் : குமார் தர்மசேன மற்றும் ரொட் டக்கர்

மோர்கனின் அழைப்புக்கு அமைய நியுசிலாந்து அணி சார்பாக தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் மார்டின் கப்டில் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினார்கள். வழமை போன்று ஆரம்பத்திலேயே மார்டின் கப்டில் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவிக்க முயன்று 15 ஓட்டங்களோடு டேவிட் வில்லேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் கேன் வில்லியம்சனும், கொலின் முன்ரோவும் இணைந்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள்.

நியுசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது கேன் வில்லியம்சன் 32 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். வேகாமாக ஆடிய கொலின் முன்ரோ 32 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்திருந்த போது பிளங்கட் வீசிய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சகல துறை வீரர் கொரி எண்டர்சன் 23 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்ற பின் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் வீழ்ந்தார்.

இதன் பிறகு களமிறங்கிய ரொஸ் டெய்லர், க்ரான்ட் எலியட், லூக் ரோன்ச்சி, மிட்செல் சான்ட்னெர், மிட்செல் மெக்லேனகன் ஆகியோரால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளித்து ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் சிறப்பாகப் பந்து வீசிய சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கட்டுகளை வீழ்த்த கிறிஸ் ஜோர்டன்,டேவிட் வில்லே, லியம் பிளங்கட்.மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி இங்கிலாந்து அணிக்கு  சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதன் படி வெறுமனே 26 பந்துகளில் (4.2 ஓவர்களில்) இங்கிலாந்து அணி 50 ஓட்டங்களைக்  குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி பவுண்டரி மழையைப் பொழிந்த  ஜேசன் ரோய் 26 பந்துகளில் அரைச்சதத்தை விளாசினார். அது அவர்  சர்வதேச டி20 போட்டிகளில் பெற்ற  முதலாவது அரைச்சதமாகும். அதன் பின் 8.2 ஓவர்களில் 82 ஓட்டங்களை  எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி தனது முதல் விக்கட்டைப் பறிகொடுத்தது. முதல் விக்கட்டாக அலெக்ஸ் ஹேல்ஸ் 20 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோய்  ரூட் ஜேசன் ரோயிற்கு  ஒத்துழைப்பு அளித்து நிதானமாக விளையாடினார்.

4.2 ஓவர்களில் 50 ஓட்டங்களைக்  குவித்த இங்கிலாந்து அணி 10.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது. வெற்றி வாய்ப்பு பிரகாசமானதை அடுத்து இங்கிலாந்து வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். பின்பு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய்  44 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரது ஆட்டமிழப்பைத் தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணியின்  தலைவர்  மோர்கன் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

இதனையடுத்து ரூட்டும், பட்லரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது. நியுசிலாந்து அணியின் சோதி வீசிய 17ஆவது ஓவரில் ரூட் ஒரு பவுண்டரியையும், பட்லர் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களையும் விளாசினர். இதனால் அந்த ஓவரில் 22 ஓட்டங்கள் பெறப்பட்டது. பின்பு 3 ஓவர்களில் ஒரு ஓட்டத்தைப் பெற வேண்டி இருக்கும் போது 18ஆவது ஓவரின் முதல் பந்தில் பட்லர் சிக்ஸர் விளாச இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக ஜேசன் ரோயைத் தவிர  பட்லர் 32 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் ரூட் 27 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் பெற்றனர்.

அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஜேசன் ரோய்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று  நடைபெறும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை விளையாடவுள்ளது.