தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் ஏப்ரலில்

117

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுனர்கள் பங்குபற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மெய்ல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வருடத்தின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.   

இதன்படி, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரைப் போல, தற்போது சுப்பர் மற்றும் தேசிய மெய்வல்லுனர் குழாம்களில் இடம்பிடித்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற வீரர்களுக்கு மாத்திரம் குறித்த தகுதிகாண் போட்டியில் பங்குபற்றலாம் என மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

>>தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் ஏப்ரலில்

இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை எதிர்வரும் மே மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் போலந்தில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்றச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இருந்து 4 X 400 இருபாலாருக்குமான அஞ்சலோட்டம் மற்றும் 4 X 400 கலப்பு அஞ்சலோட்டம் என 3 அணிகளை உலக மெய்வல்லுனர் அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,

”2021ஐ பொறுத்தவரை நாங்கள் இரண்டு முக்கிய தொடர்களை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இதில் 2021 ஒலிம்பிக் விளையாட்டு விழா மற்றும் 2022 ஆசிய விளையாட்டு விழாக்களில் எமது வீரர்களின் பங்குபற்றுதலை அதிகரிக்கச் செய்து பதக்கங்களை வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்படி, நாங்கள் சுப்பர் மெய்வல்லுனர் குழாத்தில் 21 வீரர்களையும், தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 20 வீரர்களையும் உள்ளடக்கி பயிற்சிகளை வழங்கி வருகின்றோம்.

இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றர், பெண்களுக்கான மரதன், ஆண்களுக்கான நீளம் பாய்தல், பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் மற்றும் ஆண்களுக்கான 4 X 400 அஞ்சலோட்டம் ஆகிய போட்டிகளில் எமது வீரர்களை பங்குபெறச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

>>சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

இதற்கான முதலாவது தகுதிகாண் போட்டிகள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதுடன், இறுதி தகுதிகாண் போட்டி மே மாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டார்.

இதுஇவ்வாறிருக்க, இந்த வருடம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெறுவதற்கான இறுதி தகுதிகாண் போட்டியாக நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லனர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது திறந்த மட்டப் போட்டிகளாக நடைபெறவுள்ளதால், விரைவில் அதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<