தேசிய கராத்தே அணியில் மீண்டும் இடம்பிடித்த பாலுராஜ்

138
Baluraj

இலங்கை கராத்தே அணியின் நட்சத்திரமாக வலம்வந்து கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தர ராஜா பாலுராஜ், மீண்டும் தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்துள்ளார். 

தேசிய கராத்தே அணிக்காக வீரர்களைத் தேர்தெடுக்கும் தகுதிகாண் போட்டிகள் கடந்த 13ஆம் திகதி கொழும்பு டொரிண்டன் உள்ளக அரங்கில் நடைபெற்றது.

>> SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம்

இலங்கை சார்பாக பல சர்வதேச போட்டிகள் மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 13 முன்னணி வீரர்கள் மாத்திரம் பங்குகொண்ட இந்தப் போட்டியில் நான்கு வீரர்கள் தேசிய கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.  

இதன்படி, குறித்த தகுதிகாண் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண வீரர் பாலுராஜ், தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்தார். 

அம்பாறை மாவட்டம் கல்முனைசேனைக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தர ராஜா பாலுராஜ், சிறுவயது முதலே கராத்தே விளையாட்டில் அதிக ஆர்வமுடையவராக காணப்பட்டார்

தனது சகோதரனான சென்சியஸ் முருகேந்திரனின் வழிகாட்டலுடன் கராத்தே கலையைப் பயின்ற அவர், கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டார்.

2013 முதல் 2019 வரை நடைபெற்ற அனைத்து தேசிய விளையாட்டு விழாக்களிலும் கராத்தே தோ போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று தேசிய சம்பியனாகவும் வலம்வருகின்ற அவர் இதுவரை 8 தங்கப் பதக்கங்களை தொடர்ச்சியாக வெற்றி கொண்டுள்ளார்.

>> பளுதூக்கல் பயிற்சிப் போட்டியில் பதினாறு இலங்கை சாதனைகள் முறியடிப்பு

அத்துடன், தேசிய கராத்தே குழாத்தில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ் பேசும் வீரரான பாலுராஜ், கடந்த 2017இல் இலங்கையில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கராத்தே காடா தனிநபர் பிரிவில் களமிறங்கிய சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதேவேளை, கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் விளையாட்டு பயிற்சியாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<