சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை கட்டாயம்

124

சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றச் செல்கின்ற அனைத்து வீரர்களும் கட்டாயமாக ஊக்கமருந்து பரிசோதனையை மேற்கொண்ட பின்னரே செல்ல வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற ஆசிய இளையோர் பளுதூக்கல் போட்டிகளில் பங்கேற்றிருந்த இலங்கை வீரர்கள் ஐவருக்கும் ஊக்கமருந்து பரிசோதனை குறித்து எழுந்த சர்ச்சையினால் குறித்த போட்டித் தொடரிலிருந்து நீக்குவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், ஆசிய இளையோர் பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களது ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பான தரவுகள் உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தினால் முன்னெடுத்து வருகின்ற ஊக்கமருந்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ முறைமையில் உள்ளடக்கப்படவில்லை எனவும் இது மிகப் பெரிய குற்றமாகும் என இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்திருந்தார்.

தேசிய மரதன் ஓட்ட சம்பியன்களாக சந்தனுவன், சுஜானி தெரிவு

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா விசேட அவதானம் செலுத்தியிருந்ததுடன், உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார்.

இதன்படி, சர்வதேசப் போட்டிகளில் பங்குபெறுவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பே நாட்டிலுள்ள அனைத்து சங்கங்களும் உரிய வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனைகளை நடத்த வேண்டும் எனவும், இது ஒவ்வொரு சங்கங்களினதும் தலையாய பொறுப்பு எனவும் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, எதிர்வரும் காலங்களில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியை வழங்குவதற்கு முன் ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு முன்னுரிமை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ரக்பி வீரர் கொழும்பில் திடீர் மரணம்

இதேநேரம், அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு தொடர்பில் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

”விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த தீர்மானத்தை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் எந்தவொரு பயமும் இல்லாமல் எமது வீரர்களை சர்வதேசப் போட்டிகளில் களமிறக்க முடியும். எனினும், ஊக்கமருந்து பரிசோதனைக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதால் தான் நாம் ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த பரிசோதனையை நடத்தி அறிக்கைகளை சமர்பிக்குமாறு தெரிவித்துள்ளோம். எனவே எமது நிறுவனத்தில் இதற்கான அனைத்து வசதிகளும் தற்போது இருப்பதால் வீரர்கள் காலம் தாழ்த்தாமல் ஊக்கமருந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.