மதுபோதையில் வாகனம் செலுத்திய திமுத் கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அபராதம்

356

இலங்கை டெஸ்ட் அணியின் தற்காலிக தலைவரான திமுத் கருணாரத்னவிற்கு, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய குற்றச்சாட்டுக்காக பெரும் தொகை பணம் ஒன்றை அபராதமாக செலுத்த கட்டளையிட்டுள்ளது.

இதன்படி திமுத் கருணாரத்ன, இலங்கை கிரிக்கெட் சபைக்கு 7000 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி, 13 இலட்ச ரூபாய்களை) தண்டப்பணமாக  செலுத்தவிருக்கின்றார்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி அதிகாலை கொழும்பு பொரளை பகுதியில் மது போதையுடன் காரில் பயணித்த திமுத் கருணாரத்ன, முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்து ஒன்றை  ஏற்படுத்தியிருந்தார்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் திமுத் கருணாரத்ன

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப …

கருணாரத்ன ஏற்படுத்திய குறித்த விபத்தினால் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளாகியதுடன், வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டி சாரதிக்கு பெரிதளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் திமுத் கருணாரத்னவின் மீது, மதுபோதையில் வாகனம் ஓட்டியமை, சிவப்பு விளக்கினை மதிக்காமல் வாகனம் ஓட்டியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கிற்காக திமுத் கருணாரத்ன திங்கட்கிழமை (1) நீதிமன்றத்திற்கு ஆஜராக பணிக்கப்பட்டிருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் சபையும் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே திமுத் கருணாரத்னவிற்கு அபராதத் தொகையினை செலுத்த கட்டளை கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் தான் செய்த குற்றங்களுக்காக திமுத் கருணாரத்ன, தனது முகநூல் பக்கம் மூலம்  மன்னிப்பு கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை வழிநடாத்திய திமுத் கருணாரத்ன, இலங்கை தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றை பதிவு செய்ய உதவியிருந்தார்.

அதேநேரம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திலும் இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்னவினை நியமிக்க பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த துர்ச்சம்பவங்கள் அனைத்தும் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<