மோட்டார் கார்ப்பந்தயத்தில் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த நட்சத்திர வீரரான டிலந்த மாலகமுவ முதல்முறையாக அரச அனுசரணையுடன் ஐரோப்பிய சம்பயின்ஷிப் மோட்டார் கார்ப்பந்தய போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஐரோப்பாவின் ஜேர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ள லம்போர்கினி சுப்பர் டிராபியோ தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி டிலந்த மாலகமுவ களமிறங்கவுள்ளார்.
>> இலங்கையில் 25 விளையாட்டுப் பாடசாலைகள் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல்
எனவே, மோட்டார் கார்ப்பந்தயத்தில் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட டிலந்த மாலகமுவவிற்கு அரச அனுசரணை கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த நிலையில், குறித்த தொடருக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கார்பந்தய வீரர் டிலந்த மாலகமுவவிற்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட இந்த சந்திப்பின் போது இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள சர்வதேச மோட்டார் கார்ப்பந்தய போட்டிகளில் டிலந்த மாலகமுவவிற்கு அரசாங்கத்தின் உதவியினை தொடர்ந்து வழங்குவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுமார் 36 வருடங்களாக மோட்டார் கார்ந்தப்பந்தயப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்து வருகின்ற டிலந்த மாலகமுவ, இம்முறையும் சம்பியன் பட்டத்தை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு அவருக்கு ஆசி கிட்ட வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> லங்கன் ப்ரீமியர் லீக் தொடரின் திகதி அறிவிப்பு
இதனிடையே, டிலந்த மாலகமுவவிற்கு அனுசரணை வழங்குவதற்கு முன்வந்தமை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கை சுற்றுலா சபைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த போட்டித் தொடரில் களமிறங்குவது தொடர்பில் டிலந்த மாலகமுவ கருத்து வெளியிடுகையில்,
”இலங்கையின் நாமத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் நான் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள லம்போர்கினி சுப்பர் டிராபியோ தொடரில் முதல்தடவையாக களமிறங்கவுள்ளேன். இந்தத் தொடரில் 5 நாடுகள் பங்குபற்றுகின்றன.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் இத்தாலியில் ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் என்னால் பங்குபற்ற முடியாவிட்டாலும், செப்டம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெறவுள்ள போட்டியிலும், செப்டம்பர் 9ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஸ்பெயினில் நடைபெறவுள்ள போட்டியிலும், அக்டோபர் 22 முதல் 24 வரை பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள போட்டியிலும், இறுதியாக நவம்பர் 13 முதல் 15 வரை பிரான்ஸில் நடைபெறவுள்ள போட்டியிலும் நான் போட்டியிடவுள்ளேன்.
>> Video – சாதனைகளால் அமர்க்களப்படுத்திய Chandi, Dili & Jimmy…!|Sports RoundUp – Epi 129
எனது 36 வருடகால மோட்டார்ப்பந்தய விளையாட்டு வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக நான் இதை கருகிறேன். தற்போதைய அரசாங்கத்தின் எதிர்கால கொள்கைத் திட்டங்களுக்கு அமையவே நான் இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளேன்.
இவ்வாறான சர்வதேச மோட்டார்ப்பந்தயத் தொடர்களில் பங்கேற்பதற்கு அனுசரணை வழங்குமாறு கடந்த 18 வருடங்களாக சுற்றுலாத்துறை அமைச்சிடம் நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அதற்கான எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை.
எனவே, முதல்தடவையாக எனக்கு அனுசரணை வழங்குவதற்கு முன்வந்த அரசாங்கத்திற்கும், விளையாட்டுத்துறை அமைச்சுக்கும், சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரம். எனக்கு வழங்கிய இந்தப் பொன்னான வாய்ப்பை வீணடிக்காமல் நிச்சயம் இலங்கையின் நாமத்தை சர்வதேச அரங்கில் ஜொலிக்கச் செய்வேன்” என அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது டிலந்த மாலகமுவவின் ஆலோசர்களாக செயற்பட்டுவரும் மென்டர் ஹெல்சிங்கர் நிறுவனத்தின் துமிந்மு தாப்ரேவ், அருண ஸ்ரீ வருஷஹென்னதிகே மற்றும் துலிந்த பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<