சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை எந்த உத்தியை தவறவிட்டது?

3945

நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 போட்டிகள், இலங்கை ரசிகர்களுக்கு பல வழிகளில் ஏமாற்றமாக மாறிய ஒரு தொடராகாவே அமைந்திருந்தது. எனினும், இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் எங்களுக்கு சிறிய ஆறுதல் ஒன்றை வழங்கியிருந்தார்.

[rev_slider LOLC]

இந்தியாவின் இரண்டாம் நிலை அணியுடனும், T20 தரவரிசையில் பத்தாம் இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணியுடனும் இத்தொடரில் போட்டியிட்ட இலங்கை அணியை, ரசிகர்கள் இறுதிப் போட்டிக்காவது செல்லும் என  எதிர்பார்த்திருந்தனர். தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் இருந்தது, குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை இன்னும் பல பிரச்சினைகளை வைத்திருப்பதனையே சுட்டிக் காட்டுகின்றது.

இலங்கை நடாத்திய சுதந்திரக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விருந்தாளிகளாக வந்த அணிகள் இரண்டும் விளையாடியது, ராஜா ஒருவர் ஆரோக்கியத்துடன் இருந்தும் அவரின்றி நடாத்தப்படும் ஒரு அரசவை போன்றே இருந்தது.

இத்தொடரை வெளியில் இருந்து அவதானிக்கும் ஒருவருக்கு,  இலங்கை அணி சில விடயங்களில் தவறுவிட்டதாக எண்ணத் தோன்றும். தொடரில் இடம்பெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்ததை அவதானிக்க இயலுமாக இருந்தது. இதனால், அதிக ஓட்டங்களை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் அணிகள் பெற்றிருந்தன.

சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இலங்கையினால் எட்டப்பட்ட 175 ஓட்டங்களே ஆர். பிரேமதாச மைதானத்தில் அணி ஒன்றினால் இரண்டாவதாக துடுப்பாடி பெறப்பட்ட அதிக ஓட்டங்களாகும்.

இலங்கை அணியின் தோல்விக்கு தலைவர் பொறுப்புக்கூற வேண்டும்: தயாசிறி

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே பொறுப்புக்கூற…

இலங்கை பங்கேற்ற தொடரின் இரண்டாவது போட்டியில் 214 ஓட்டங்களை பங்களாதேஷுக்கு எதிராக நிர்ணயம் செய்தது, இந்த இமாலய இலக்கு போட்டியின் வெற்றியாளர்கள் இலங்கை அணியாகத்தான் இருக்கப் போகின்றது என மறைமுகமாக கூறியிருந்தது. எனினும், சவால் மிகுந்த இலக்கினை பங்களாதேஷ் அணி தாண்டியது இலங்கை வீரர்கள் தவறுதலாக அபாய சமிக்ஞைக்கு உரிய ஒரு பொத்தானை அழுத்தி விட்டது போன்று அமைந்திருந்தது.

இரண்டாம் சுற்றுப் போட்டிகளில், முதல் சுற்று மூலம் எந்தவொரு அனுபவத்தையும் உணராத இலங்கை அணியினர் முதல் சுற்றுப் போட்டிகள் நடந்த அதே ஆடுகள நிபந்தனைகளையே இரண்டாம் சுற்றுப் போட்டிகளுக்கும் பயன்படுத்தியது எதிரணிகளுக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக மாறியது.

இந்த தொடரில் பங்கேற்ற அணிகளை ஒப்பிடும் போது, இலங்கை அணியின் பந்துவீச்சே மிகவும் மோசமானது எனலாம். இந்தியாவோ அல்லது பங்களாதேஷ் அணியோ இலங்கையைவிட தரமான சுழல் பந்துவீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் வைத்திருந்தார்கள்.

தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களான முஸ்தபிசுர் ரஹ்மான், யுஸ்வேந்திர சாஹல் போன்றோர் தடுமாறிய போதிலும், தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் இம்முறையும் உபயோகப்படுத்தப்பட்டிருந்ததால், அவர்கள் இரண்டாம் சுற்றில் மைதானத்தின் தன்மை அறிந்து சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

இலங்கை அணியில் திசர பெரேராவையோ அல்லது தசுன் சானக்கவையோ தவிர எந்த வீரர்களும் பந்தை நீண்ட தூரத்திற்கு அடிக்க கூடியவர்கள் கிடையாது. இலங்கை அணி பொதுவாக நேரத்திற்கு ஏற்றாற் போல் பந்தை (Timing Batsman) அடிக்க கூடிய வீரர்களையே கொண்டிருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதன்படி, தொடரின் இரண்டாம் சுற்றில் முதல் சுற்றுக்காக பயன்படுத்திய ஆடுகளமே பயன்படுத்தப்பட்ட காரணத்தினால், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் பற்றி படித்துக் கொள்ள எதிரணிப் பந்துவீச்சாளர்களுக்கு இலகுவாக இருந்தது. இதனாலேயே, விருந்தினர்களாக வந்திருந்த இரண்டு அணிகளும் இரண்டாம் சுற்றில் மைதான நிலைமகளை இலகுவாக சுதாரித்துக் கொண்டு செயற்பட்டிருந்தனர்.

குறிப்பாக சொல்லப் போனால் பங்களாதேஷ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மானை குறிப்பிட முடியும். ரஹ்மான் தீர்மானமிக்க இலங்கை அணியுடனான இரண்டாம் சுற்றுப் போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருந்ததோடு, தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கெதிராக 18ஆவது ஓவரை ஓட்டம் எதுவுமற்றதாக வீசி அசத்தியிருந்தார்.

இத்தோடு இலங்கை அணியின் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைவது வீரர்களின் தெரிவாகும். இலங்கை அணித் தேர்வாளர்கள் கொஞ்சம் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு, பந்துவீச்சிலும் நல்ல முறையில் செயற்படும் வீரர் ஒருவரை எதிர்பார்த்திருக்கின்றார்கள் போலும், எனினும் இலங்கை அணிக்கு அது இந்த தொடரில் பெரிதும் கைகொடுத்திருக்கவில்லை.

1990ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து அணி, தமது தரப்பின் குறைகளை சரி செய்ய இலங்கையின் இதே முறையை முயற்சித்திருந்தது. கொஞ்சம் துடுப்பாட்டத்திலும் அசத்தி கொஞ்சம் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட கூடிய வீரர்களான அடம் ஹொல்லியக், மார்க் எல்ஹாம் போன்றவர்களை ஒரு நாள் அணிக்குள் இணைத்த இங்கிலாந்து அணி 1999 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இடம்பெற்ற உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் கனவுகளுடன் காணப்பட்ட போதிலும், துரதிஷ்டவசமாக தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி பாரிய ஏமாற்றம் ஒன்றை எதிர்கொண்டிருந்தது.

இதேமாதிரியான எதிர்பார்ப்புக்களுடன் 35 வயதான ஜீவன் மெண்டிசை இலங்கை அணிக்கு விளையாட தேர்வுக்குழு அழைத்திருந்தது. மெண்டிசின் தெரிவானது எமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். ஏனெனில், மெண்டிஸ் உள்ளூர் போட்டிகளிலும் அண்மைய நாட்களில் சிறப்பாக செயற்பட்ட ஒருவர் அல்ல. மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே இலங்கை அணிக்காக விளையாடியிருந்த மெண்டிஸ், அழுத்தம் நிறைந்த தருணங்களில் சரியான முறையில் துடுப்பாடுவதில் தவறுவிட்டிருந்தார். மெண்டிசின் பந்துவீச்சும் அவ்வளவு சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை.

இப்போதைய நாட்களில் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி வழங்குவது பயிற்றுவிப்பாளர்களுக்கு அழுத்தம் தரும் ஒரு விடயமாகவே அமைகின்றது. விரல் மூலம் பந்தை சுழற்றும் வீரர்களுக்கு ஆடுகளமும் சிறிது உதவியாக இருக்கும், ஆனால் மணிக்கட்டு சுழல் வீரர்கள் ஆடுகளம் தரும் உதவியை எதிர்பார்க்காமல் அனைத்தையும் அவர்களே தாமாக செய்ய வேண்டியிருக்கும். ஐ.சி.சி நடாத்தும் ஒரு தொடரில் எப்படியான ஆடுகளம் தரப்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது.

ஐ.சி.சி இன் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையை எடுத்துப் பார்த்தால் முதல் பத்துப் பேருக்குள் மூன்று மணிக்கட்டுப் பந்துவீச்சாளர்களே அடங்குகின்றனர். இதே மாதிரி, T20 தரவரிசையில் பார்க்கும் போது நான்காம் இடத்திற்கு மேலுள்ள வீரர்கள் யாவரும் மணிக்கட்டு சுழல் வீரர்களாகவே இருக்கின்றனர்.

எனவே, இலங்கை அணி இத்தொடரில் ஜெப்ரி வன்டர்சேய் அல்லது சைனமன் (இடதுகை மணிக்கட்டு) சுழல் வீரரான லக்ஷான் சந்தகனுக்கோ வாய்ப்பு தந்திருக்கலாம்.

ஐ.சி.சி T-20 தரவரிசையில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னேற்றம்

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய…

நாம் கூறுவது போன்று, வன்டர்சேயிற்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்க முடியாமல் போனமைக்கு காரணங்கள் இருந்தன. வன்டர்சேயின் காயங்கள் குணமாக நேரம் எடுத்தது, அவர் திருமண பந்தத்தில் இணைந்து இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டது, மற்றுமொரு சுழல் வீரரான வனிது ஹஸரங்கவை பயன்படுத்தியது பலன் தரமால் போனது போன்ற எல்லாக் காரணங்களும் இலங்கை அணி ஜீவன் மெண்டிசைப் பயன்படுத்த காரணமாக அமைந்துவிட்டது.

மேலும் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் 215 என்ற வெற்றி இலக்கை அவ்வணி எட்டிய பின்னரும், பாடம் எதனையும் கற்றுக் கொள்ளாத இலங்கை அணி அடுத்த போட்டியில் மேலதிக ஒரு துடுப்பாட்ட வீரர் இல்லாத வண்ணம் களமிறங்கியிருந்தது. தசுன் சானக்க, ஜீவன் மென்டிஸ் ஆகியோரை நம்பி இப்படியாக செயற்பட்டது அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கைத் தரப்புக்கு தோல்வியை சந்திக்க ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.

இது தவிர சுதந்திரக் கிண்ணங்களும், தொடரை நடாத்தும் நாடுகளுக்கு  அவ்வளவு அதிர்ஷ்டம் தருவதில்லை. 1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஆசியாவின் கிரிக்கெட் ஜாம்பவன்கள் மூன்றும் தமது சுதந்திர தினத்தின் 50 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கிரிக்கெட் தொடர்களில் விளையாடியிருந்தன.

1998 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூறும் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறியிருந்த போதிலும், அதில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. குறித்த போட்டியில் கச்சிதமான சதமொன்றை அரவிந்த டி சில்வா விளாசியிருந்த போதிலும் அது பயன்தரவில்லை.

1997 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒழுங்கு செய்திருந்த அவர்களது 50 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு கூட அவர்களால் முன்னேற முடியாது போயிருந்தது.

இந்தியாவின் சுதந்திரக் கிண்ணத்தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்ததுடன், பாகிஸ்தானின் சுதந்திர கிண்ண கோப்பையில் தென்னாபிரிக்கா இலங்கையை வீழ்த்தி சம்பியனாக மாறியிருந்தது.

ஹதுருசிங்கவின் வியூகங்கள் இலங்கை அணிக்கு தற்போது கிடைத்தும் சுதந்திரக் கிண்ணத்தை இலங்கை வெல்ல முடியவில்லை எனில் இந்த சுதந்திரக் கிண்ணங்களில் எல்லாம் ஏதோ சூனியம் வைக்கப்பட்டிருக்கின்றதோ என்னவோ? சொல்லத் தெரியவில்லை.