சாஹலின் அபார சுழலினால் முதல் T20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வி

248
Sri Lanka v India - First T20I
 

இன்று (20) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணி 93 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தி இருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

முன்னதாக, கட்டாக் நகரின் பாராபட்டி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா இலங்கை அணி விளையாடும் 100 ஆவது T20 போட்டியில் முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியிருந்தார்.

இலங்கை அணியின் எதிர்காலதிற்கான ஹத்துருசிங்கவின் திட்டம்

இலங்கை அணிக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தமையை எனக்கு கிடைத்த மிகப்..

இந்திய அணியுடனான தமது சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர் என்பவற்றை பறிகொடுத்திருந்த போதிலும் T20 தொடரில் நல்ல முடிவுகளைக் காணும் நோக்கோடு இப்போட்டிக்காக தமது அணியில் சில மாற்றங்களை இலங்கை அணி மேற்கொண்டிருந்தது.

அந்தவகையில், அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா அணிக்கு  திரும்பியதோடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த T10 கிரிக்கெட் தொடரில், இலங்கை சார்பான அணியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாந்து T20 போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

மறுமுனையில் விராத் கோஹ்லி, சிக்கர் தவான் ஆகிய முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் இந்த T20 தொடரில் இல்லாத நிலையில் இந்திய அணி நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.

இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் நல்லதொரு ஆரம்பத்தை வழங்கியிருந்தனர். இந்திய அணியின் முதல் விக்கெட்டாக அணித் தலைவர் ரோஹித் சர்மாவை இலங்கை அணி கைப்பற்றியது. அஞ்செலோ மெதிவ்சின் பந்து வீச்சில் (மிட் ஒன் திசையில்) துஷ்மந்த சமீரவிடம் பிடிகொடுத்த ரோஹித் சர்மா, 17 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

எனினும் லோக்கேஷ் ராகுல் இந்திய அணிக்கு அதிரடியான ஆட்டம் மூலம் பெற்ற தனது இரண்டாவது T20 அரைச் சதத்தோடு வலுச்சேர்த்திருந்தார். இந்த அரைச் சதத்துடன் இந்திய அணி இலகுவாக 12.3 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்திருந்தது.

சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணித் தரப்புக்கு நான்காம் மற்றும் ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வீரர்களாக முறையே மைதானம் வந்த மஹேந்திர சிங் டோனி மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் வாண வேடிக்கை காட்டி ஓட்டங்கள் சேர்க்க உதவினர். இதனால் 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், லோக்கேஷ் ராகுல் 48 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 61 ஓட்டங்களைக் குவித்திருந்ததோடு, மஹேந்திர சிங் டோனி 22 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்களுடனும், மனீஷ் பாண்டே 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பாக அஞ்செலோ மெதிவ்ஸ், அணித் தலைவர் திசர பெரேரா மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து 20 ஓவர்களில் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 181 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, ஆரம்பத்தில் இருந்து இந்திய அணியின் சுழல் வீரர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும்  குல்தீப் யாதவ் ஆகியோரின் அபாரத்தினால் முக்கிய துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களை இலகுவாக பறிகொடுத்தது. இலங்கை அணியின் எஞ்சிய விக்கெட்டுக்களை ஹர்திக் பாண்டியா பதம் பார்த்தார்.

ஒரு நாள் போட்டித் தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நிறைவுக்கு…

முடிவில் 16 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இப்போட்டியில் 93 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக உபுல் தரங்க 23 ஓட்டங்களினை குவித்திருக்க, ஏனைய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் 20 இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தனர்.

அபாரமாக செயற்பட்ட இந்திய அணியின் பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் தனது சுழலின் மூலம் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பை வெற்றியாளராக மாற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக யுஸ்வேந்திர சாஹல் தெரிவாகினார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடரின் தீர்மானமிக்க இரண்டாவது T20 போட்டி வெள்ளிக்கிழமை (22) இந்தோரில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 180/3 (20) –  லோக்கேஷ் ராகுல் 61(48), மஹேந்திர சிங் டோனி 39*(22), மனீஷ் பாண்டே 32*(18), அஞ்செலோ மெதிவ்ஸ் 19/1(3)

இலங்கை – 87 (16) – உபுல் தரங்க 23(16), குசல் பெரேரா 19(28), யுஸ்வேந்திர சாஹல் 23/4(4), ஹர்திக் பாண்டியா 29/3(4), குல்தீப் யாதவ் 18/2(4)

முடிவு – இந்தியா  93 ஓட்டங்களால் வெற்றி