டயலொக் கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு

253
Dialog Sri Lanka Cricket Awards
டயலொக்கின் அனுசரணையுடன் இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் குறித்த நிகழ்வு நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிகழ்வு தொடர்பிலான ஊடக அறிக்கையொன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதில், 2016ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் விருது வழங்கும் இரவு நிகழ்வு செப்டம்பர் 21ஆம் திகதி பத்தரமுல்லயில் அமைந்துள்ள வோடர்ஸ் எஜ் ஹொட்டலில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்பொழுது இந்த நிகழ்வு இடம்பெறும் தினத்தை ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தீர்மானம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘இம்முறை இடம்பெறும் விருது வழங்கும் நிகழ்வுகளுக்கான சிறந்த கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வீரர்களைத் தெரிவு செய்வதற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, அது தொடர்பிலான பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 8 வருடங்களாக இவ்வாறு நாட்டின் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகின்றது. அதில் இதுவரை இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளுக்கு இலங்கையின் முன்னணி தொலைபேசி சேவை வழங்குனரான டயலொக் ஆசியாடா நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது. இந்நிலையில், இம்முறையும் இந்நிகழ்வுக்கு டயலொக் ஆசியாடா அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.