திமுத்தின் அபார சதத்தால் கொழும்பு அணிக்கு இலகு வெற்றி

National Super League Four Day Tournament 2022

637
Dimuth Karunarathne

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் கடைசி வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (25) நிறைவுக்கு வந்தன.

இதில் காலி அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் கொழும்பு அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதனிடையே, கொழும்பு அணிக்காக தனது முதல் போட்டியில் அணித் தலைவராக களமிறங்கிய திமுத் கருணாரத்ன, 2 ஆவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்த, அந்த அணிக்காக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய 2 ஆவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயற்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார்.

இதன் மூலம் இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் தன்னுடைய மூன்றாவது 5 விக்கெட்டுகள் குவியலை அவர் பதிவுசெய்தார்.

>> கொழும்பு அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத்

மறுபுறத்தில் காலி அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய அகில தனன்ஞய, முதல் இன்னிங்ஸில் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதேபோன்று, யாழ்ப்பாண அணிக்கு ஏதிரான போட்டியில் தம்புள்ளை அணி வீரர்களான லசித் அபேரட்ன, துஷான் ஹேமந்த மற்றும் மினோத் பானுக ஆகியோர் அரைச்சதங்களைக் குவிக்க, பந்துவீச்சில் யாழ்ப்பாண அணி வீரர் நுவன் பிரதீப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டியிருந்தார்.

கொழும்பு எதிர் காலி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (24) ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி, தமது முதல் இன்னிங்ஸுக்காக 61.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, 152 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனையடுத்து 115 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது

கொழும்பு அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி, 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த கொழும்பு அணி, அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் சதம் (125) மற்றும் ரொஷேன் சில்வாவின் (55) அரைச்சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 221 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொழும்பு அணி, இந்த வெற்றியின் மூலம் தமது 3 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

காலி அணி – 267 (61.3) – சங்கீத் குரே 51, பிரியமால் பெரேரா 51, பபசர வடுகே 42, கவிஷ்க அஞ்சுல 33, தனன்ஞய லக்ஷான் 24, பிரபாத் ஜயசூரிய 6/111, அஷேன் பண்டார 2/4

கொழும்பு அணி – 152 (38.5) – அஷேன் பண்டார 35, நிபுன் தனன்ஞய 25, சிதார கிம்ஹான் 20, அகில தனன்ஞய 5/47, சானக ருவன்சிறி 3/45

காலி அணி – 103 (18) – தனன்ஞய லக்ஷான் 47, பபசர வடுகே 26, ஹஷான் துமிந்து 14, பிரபாத் ஜயசூரிய 5/41, லக்ஷித மதுரங்க 3/22, நளின் ப்ரியதர்ஷன 2/39

கொழும்பு அணி – 221/2 (50.4) – திமுத் கருணாரத்ன 125, ரொஷேன் சில்வா 55, நிபுன் தனன்ஞய 35, சலன டி சில்வா 1/30

முடிவு – கொழும்பு அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

யாழ்ப்பாணம் எதிர் தம்புள்ளை

லசித் அபேரட்ன (68), துஷான் ஹேமந்த (63) மற்றும் மினோத் பானுக (53) ஆகிய மூவரதும் அரைச்சதங்களின் உதவியுடன் யாழ்ப்பாண அணிக்கு எதிராக வலுவான ஓட்ட எண்ணிக்கையை தம்புள்ளை அணி பெற்றுக்கொண்டது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்ற இந்தப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தம்புள்ளை அணி, 99.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி இன்றைய 2 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை அணி – 283 (99.5) – லசித் அபேரட்ன 68, துஷான் ஹேமந்த 63*, மினோத் பானுக 53, நுவன் பிரதீப் 7/52

யாழ்ப்பாணம் அணி – 45/0 (18.4) – நவோத் பரணவிதான 24*, நிஷான் மதுஷ்க 12*

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<