NSL தொடரில் ஹெட்ரிக் சதத்தை தவறவிட்ட ஓஷத

National Super League Four Day Tournament 2022

142

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான இரண்டு போட்டிகள் இன்று (17) ஆரம்பமாகியது.

இதில் தம்புள்ளை அணிக்கெதிரான போட்டியில் கண்டி விரர்களான ஓஷத பெர்னாண்டோ, கமில் மிஷார மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய வீரர்கள் அரைச்சதம் அடித்து பிரகாசித்திருந்தனர்.

அதேபோல, யாழ்ப்பாணம் அணிக்கெதிரான போட்டியில் காலி அணியின் சகலதுறை வீரரான சுமிந்த லக்ஷான் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

யாழ்ப்பாணம் எதிர் காலி

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியில் காலி அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் நவோத் பரணவிதான 34 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, காலி அணியின் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட சுமிந்த லக்ஷான் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் அணி – 218/9 (77) – நவோத் பரணவிதான 34, நிஷான் மதுஷ்க 29, சந்தூஷ் குணதிலக்க 29, சுமிந்த லக்ஷான் 4/17, டில்ஷான் மதுஷங்க 2/42, சலன டி சி;ல்வா 2/72

கண்டி எதிர் தம்புள்ளை

ஓஷத பெர்னாண்டோ (97), கமில் மிஷார (74) மற்றும் குசல் மெண்டிஸ் (51) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் தம்புள்ளை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி வலுவான நிலையில் உள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தப்போட்டியில் தம்புள்ளை அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஓஷத பெர்னாண்டோ 97 ஓட்டங்களைக் குவித்து இம்முறை போட்டித்தொடரில் மூன்றாவது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனிடையே, தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் மாலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி 297/3 (77) – ஓஷத பெர்னாண்டோ 97, கமில் மிஷார 74, குசல் மெண்டிஸ் 51*, லசித் குரூஸ்புள்ளே 43, மாலிந்த புஷ்பகுமார 2/80

இந்த இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<