பாகிஸ்தானுக்கு எதிரான 1ஆவது டெஸ்டில் எண்டர்சன் விளையாடுவது கேள்விக்குறி

530

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் எண்டர்சன் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் லங்காஷையர் அணிக்காக நாட்டிங்காம்ஷையர் அணியை எதிர்த்து விளையாட இருந்தார்.

ஆனால், அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்தப் போட்டியில் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘ஆண்டர்சனின் காயம் குறித்து முழுமையாக இன்னும் தெரியவில்லை. ஆனால், எலும்பு முறிவு இருக்கலாம் என்று புரிந்துகொள்ளப்பட்டாலும், பயப்படக்கூடிய அளவிற்குப் பெரிய அளவில் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி 3ஆம் திகதி நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. அதன்பின் 14ஆம் திகதி லோர்ட்ஸில் முதல் டெஸ்ட் தொடங்கவிருக்கிறது.

சமீபத்தில் இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 21 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அவர் அணியில் இடம்பெறாதது இங்கிலாந்து அணிக்குப் பெரிய இழப்பாகும். பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

33 வயதாகும் ஆண்டர்சன் சமீப காலமாக அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட காயத்தில் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. தென்ஆபிரிக்காவிற்கு எதிரான டர்பன் டெஸ்டிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்டில் ஆண்டர்சன் இடம்பெறாவிடில், பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பிடிப்பார். இவர் காயம் காரணமாக இலங்கை தொடரின் பாதியில் இருந்து விலகினார். நேற்று துர்காம் அணிக்காக டி20 போட்டியில் விளையாடினார். இருந்தாலும் ஸ்டோக்ஸ் இன்னும் பந்து வீசி பயிற்சி எடுக்கவில்லை. முழுமையாகக் காயம் குணமடையாத பென் ஸ்டோக்ஸ் மீது இங்கிலாந்து அழுத்தம் கொடுக்கமா? என்பது சந்தேகமே. ஆகையால் மாற்று வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது.

பென்ஸ்டோக்ஸ் விலகியதால் ஆல்ரவுண்டர் இடத்தில் கிறிஸ் வோக்ஸ் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்