கண்டி அணிக்காக சதம் விளாசிய ஓசத ; சகலதுறையிலும் பிரகாசித்த தனன்ஜய

Dialog-SLC National Super League 2022

640

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (30) நடைபெற்ற போட்டிகளில் கண்டி மற்றும் ஜப்னா அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

போட்டித்தொடரின் முதலாவது சதத்தை இன்றைய தினம் கண்டி அணிக்காக விளையாடிய ஓசத பெர்னாண்டோ பதிவுசெய்ய, தனன்ஜய டி சில்வா, சந்துஷ் குணதிலக்க மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோர் அரைச்சதங்களை பதிவுசெய்தனர்.

திமுத்துடன் பிரகாசித்த இளம் வீரர்கள்

கண்டி எதிர் தம்புள்ள

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கண்டி அணி, 155 ஓட்டங்கள் வித்தியாசாத்தில் அபார வெற்றியை பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணிசார்பாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓசத பெர்னாண்டோ தொடரின் முதலாவது சதத்தை பதிவுசெய்ய, கமிந்து மெண்டிஸ், லசித் குரூஸ்புள்ளே மற்றும் செஹான் ஆராச்சிகே ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்புடன் கண்டி அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஓசத பெர்னாண்டோ 141 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக கமிந்து மெண்டிஸ் 43 ஓட்டங்களையும், குரூஸ்புள்ளே 32 ஓட்டங்களையும், செஹான் ஆராச்சிகே 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 4 விக்கெட்டுகளையும், துவிந்து திலகரட்ன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய தம்புள்ள அணியை பொருத்தவரை கடந்த மூன்று போட்டிகளிலும் அணியின் துடுப்பாட்டத்துகாக போராடிவரும் அணித்தலைவர் அஷான் பிரியன்ஜன் மாத்திரம் அரைச்சதம் கடந்து 50 ஓட்டங்களை பெற, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் கடந்த போட்டிகளை போன்று, இந்த போட்டியிலும் பிரகாசிக்க தவறினர்.

எனவே, தம்புள்ள அணி 42.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் புலின தரங்க 3 விக்கெட்டுகளையும், கமிந்து மெண்டிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, தம்புள்ள அணி தொடர்ச்சியாக தங்களுடைய நான்காவது போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதில், 3 போட்டிகளில் விளையாடியுள்ள கண்டி அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

காலி எதிர் ஜப்னா

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் தனன்ஜய டி சில்வாவின் சகலதுறை பிரகாசிப்பு மற்றும் துடுப்பாட்ட வீரர்களின் சம பலமான பங்களிப்புடன் ஜப்னா அணி, காலி அணிக்கு எதிரான போட்டியில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

காலி அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணிக்கு, சதீர சமரவிக்ரம 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுத்தந்தார். இதனைத்தொடர்ந்து, சந்துஷ் குணதிலக்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் மத்தியவரிசையில் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்று

அணிக்கு பலமளித்தனர். தனன்ஜய டி சில்வா 55 ஓட்டங்களையும், சந்துஷ் குணதிலக்க 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

தொடர்ந்துு நிமந்த மதுஷங்க 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்களையும், இஷான் ஜயர்தன 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ஜப்னா அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் தனன்ஜய லக்ஷான் மற்றும் முதித லக்ஷான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணியை பொருத்தவரை, தனன்ஜய லக்ஷான் மற்றும் ஜெஹான் டேனியல் ஆகியோர் மாத்திரமே 30 ஓட்டங்களை கடக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தை பெற்றுக்கொண்டும் பாரிய ஓட்டங்களை பெறத்தவறினர். ஜெஹான் டேனியல் 36 ஓட்டங்களையும், தனன்ஜய லக்ஷான் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற, பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட அணித்தலைவர் தனன்ஜ டி சில்வா 4 விக்கெட்டுகளையும், இஷான் ஜயரத்ன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். எனவே, காலி அணி 36.2 ஓவர்கள் நிறைவில் 175 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

குறித்த இந்தப்போட்டியில் ஜப்னா அணிசார்பாக விளையாடிய தமிழ் பேசும் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் 7 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஜப்னா அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<