கடற்படையை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற திலின வீரசிங்க

228

டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் க்ளிபர்ட் கிண்ண (Clifford Cup) ரக்பி தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இறுதி நிமிடத்தில் திலின வீரசிங்க பெனால்டி வாய்ப்பு ஒன்றின் மூலம் பெற்றுக் கொண்ட புள்ளிகளினால் ஹெவலொக் விளையாட்டுக் கழகத்தை 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய கடற்படை அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கொழும்பு குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் இன்று (21) தொடங்கியிருந்த இந்த போட்டியின், முதல் புள்ளிகளை இளஞ்சிவப்பு நிற உடைக்கு சொந்தக்காரர்களான ஹெவலொக் அணியினர் பெற்றிருந்தனர். அஷ்மிர் பாஜூதீன் வைத்த போட்டியின் முதல் ட்ரையை மேலதிக புள்ளிகளாக ரீசா முபாரக் மாற்றியிருந்தார். (ஹெவலொக் 7 – 0 கடற்படை)

ஹெவலொக் அணியின் முதல் ட்ரைக்கு உடனடியாக கடற்படை அணியும் பதிலடி தந்தது. சரித் சில்வா வைத்த ட்ரையை திலின வீரசிங்க கம்பத்திற்கு மேலால் உதைந்து கொன்வெர்சன் செய்திருந்தார். இதனால், இரண்டு அணிகளதும் புள்ளிகள் சமனாகின. (ஹெவலொக் 7 – 7 கடற்படை)

க்ளிபர்ட் கிண்ண அரையிறுதியில் கண்டி, ஹெவலொக், கடற்படை மற்றும் CR & FC அணிகள்

போட்டியின் இரண்டாவது ட்ரையோடு உற்சாகமடைந்து கொண்ட கடற்படை அணியினர் போட்டியில் தொடர்ந்து தமது ஆதிக்கத்தை முன்னெடுத்துக் கொண்டனர். மொஹமட் அப்சாலின் உதவியோடு சத்துர கோமஸ் எதிரணியின் பின்களத்தை ஊடறுத்து கடற்படை அணிக்காக இரண்டாவது ட்ரையை வைத்தார். (ஹெவலொக் 7 – 12 கடற்படை)

இதனையடுத்து இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு பெனால்டி வாய்ப்பு மூலம் புள்ளிகள் பெற சந்தர்ப்பம் கிடைத்த போதிலும், இரண்டு அணிகளும் அதனை தவறவிட்டிருந்தது.

தொடர்ந்து போட்டியின் முதற்பாதி நிறைவடைய முன்னர், பாஜூதீன் ஹெவலொக் அணிக்காக அடுத்த ட்ரையை வைத்தார். இந்த ட்ரையை ரீசா முபாரக் மேலதிக புள்ளிகளாக மாற்றத் தவறினார்.

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 12 (2T,1C) – 12 (2T,1C) கடற்படை விளையாட்டுக் கழகம்

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கிடைத்த தொடர்ச்சியான இரண்டு பெனால்டி வாய்ப்புக்கள் மூலம் கடற்படை அணி தமது புள்ளிகளை அதிகரித்துக் கொண்டது. அத்தோடு, அதீஷ வீரசிங்க கடற்படை அணிக்காக வைத்த ட்ரையையும் திலின வீரசிங்க கொன்வெர்சன் செய்திருந்தார். இதனால், இரண்டாம் பாதியிலும் கடற்படையின் ஆதிக்கம் தொடர்ந்தது. (ஹெவலோக் 12 – 25 கடற்படை)

போட்டியின் 66 ஆவது நிமிடம் வரை கடற்படை அணி அழுத்தங்கள் எதுவும் இன்றி முன்னேறியிருந்தது. எனினும், இத்தருணத்தில் லசிந்து இஷான் ஹெவலொக் அணிக்காக ஒரு ட்ரையை வைத்தார். இந்த ட்ரை ரீசா முபராக்கினால் அழகான முறையில் கொன்வெர்சன் செய்யப்பட்டிருந்தது. (ஹெவலொக் 19 – 25 கடற்படை)

இதனையடுத்து மேலதிக வீரராக ஆடுகளத்திற்குள் இரண்டாம் பாதியில் நுழைந்த கிஹான் மதுசங்க ஹெவலொக் அணிக்கு இன்னுமொரு ட்ரையை பெற்றுத்தந்தார். இந்த ட்ரையும் ரீசா முபாரக்கினால் வெற்றிகரமாக கொன்வெர்சன் செய்யப்பட கடற்படையின் புள்ளிகளை ஹெவலொக் அணி தாண்டியது. (ஹெவலோக் 26 – 25 கடற்படை)

வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு

இப்படியாக ஹெவலொக் அணி முன்னிலையோடு ஆட்டத்தை தொடர்ந்தது, போட்டியில் ஹெவலொக் அணியினரே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இறுதி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புள்ளிகளாக மாற்றிய திலின வீரசிங்க எதிர்பாராத வெற்றியொன்றை கடற்படை அணிக்கு பெற்றுத் தந்ததுடன், க்ளிபர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் அணியாகவும் தனது தரப்பை மாற்றினார்.

முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 26 (4T, 3C) – 28 (3T,3P,2C) கடற்படை விளையாட்டுக் கழகம்

இந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் கடற்படை அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) க்ளிபர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் கண்டி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்கின்றது.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சரித் சில்வா (கடற்படை விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றோர்

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் – அஷ்மிர் பாஜூதீன் (2T), லசிந்து இஷான் (1T), கிஹான் மதுசங்க (1T), ரீசா முபாரக் (3C)

கடற்படை விளையாட்டுக் கழகம் – சரித் சில்வா (1T), சத்துர கோமஸ் (1T), அதீஷ வீரத்துங்க (1T), திலின வீரசிங்க (3P,2C)