தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க

144

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20i தொடரின் போதும் இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக, ருமேஷ் ரத்நாயக்கவே செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் இந்தியாவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த மிக்கி ஆர்தரின் பதவிக்காலமானது கடந்த ஆண்டோடு நிறைவடைந்த நிலையில், இம்மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு ஒருநாள் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

ருமேஷ் ரத்நாயக்கவின் ஆளுகையிலான இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை 2-1 எனக் கைப்பற்றியிருந்ததோடு, குறித்த ஒருநாள் தொடரின் பின்னர் இலங்கை அணி அவுஸ்திரேலிய வீரர்களுடன் ஆடவுள்ள T20 தொடரில் புதிய பயிற்சியாளருடன் களமிறங்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அவுஸ்திரேலிய தொடருக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் எவரும் நியமனம் செய்யப்படாத நிலையில், இலங்கை அணிக்கு ஜிம்பாப்வே தொடரின் போது பயிற்சியாளராக செயற்பட்ட ருமேஷ் ரத்நாயக்க அவுஸ்திரேலிய T20 தொடரிலும் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றார்.

கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ள ருமேஷ் ரத்நாயக்க, இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இலங்கை அணியுடன் செல்லாமல், குறித்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பங்கெடுக்கின்ற T20 தொடரானது பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகின்றது.

T20I தொடர் அட்டவணை

  • முதல் போட்டி – சிட்னி – பெப்ரவரி 11
  • இரண்டாவது போட்டி – சிட்னி – பெப்ரவரி 13
  • மூன்றாவது போட்டி – கென்பரா – பெப்ரவரி 15
  • நான்காவது போட்டி – மெல்பர்ன் – பெப்ரவரி 18
  • ஐந்தாவது போட்டி – மெல்பர்ன் – பெப்ரவரி 20

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<