உடற்தகுதியை நிரூபித்த தனன்ஜய, திரிமான்ன

Sri Lanka tour of West Indies 2021

494
Dhananjaya de Silva and Lahiru Thirimanne
Image Credits – Dhananjaya de Silva Twitter

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய உடற்தகுதி பரிசோதனையை, இலங்கை அணியின் சகலதுறை வீரர்  தனன்ஜய டி சில்வா மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோர் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை உடற்தகுதி பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது. இந்த உடற்தகுதி பரிசோதனையில், 32 வீரர்கள் பங்கேற்றதுடன், லஹிரு திரிமான்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் பங்கேற்கவில்லை.

>> இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் போட்டி அட்டவணை வெளியானது!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது, தனன்ஜய டி சில்வாவின் இடது தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டது. இலங்கை வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனையின் போது, தனன்ஜய டி சில்வா சிகிச்சைப்பெற்று வந்ததுடன், லஹிரு திரிமான்ன கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சைப்பெற்று வந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த இருவருக்கும் இன்றைய தினம் காலை (25), உடற்தகுதி பரிசோதனைக்கான 2 கிலோ மீற்றர் தூரத்தை 8.35 நிமிடங்களில் நிறைவுசெய்யவேண்டிய இலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. குறித்த இலக்கினை இருவரும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் கடந்து உடற்தகுதியை நிரூபித்தனர்.

தனன்ஜய டி சில்வா குறிப்பிட்ட தூரத்தை 8.21 நிமிடங்களில் நிறைவுசெய்ததுடன், லஹிரு திரிமான்ன 8.20 நிமிடங்களில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை கடந்திருந்தார்.

இவர்கள் இருவரும் உடற்தகுதியை நிரூபித்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இடம்பிடிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I  தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணித்துள்ளது. இந்தநிலையில், மே.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<