பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியார் பதவியை ஏற்க மறுத்த மிக்கி ஆத்தர்

266
Mickey Arthur not to reprise his role as Pakistan coach

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் மீண்டும் அந்தப் பதவியில் செயற்படமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி

அந்தவகையில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆத்தருடன் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததனை அடுத்தே அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் செயற்பட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியிருக்கின்றது.

தற்போது இங்கிலாந்தின் உள்ளூர் கழக அணியான டேர்பிஷையரிற்கு தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வரும் மிக்கி ஆத்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளராக செயற்படுவதற்கும் பேச்சுவார்த்தைகளின் போது மறுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக்கி ஆத்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2017ஆம் ஆண்டில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை முதன் முறையாக வெற்றி கொண்ட போது அதன் தலைமைப் பயிற்சியாளராக காணப்பட்டதோடு டேர்பிஷையர் கழக அணிக்கு பணியாற்ற முன்னர் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது தற்காலிக பயிற்சியாளர்களுடன் காணப்படுகின்ற பாகிஸ்தான் அணிக்கு மிக்கி ஆத்தரினை 2025ஆம் ஆண்டு வரை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கும் பேச்சுவார்த்தைகளே வெற்றிகரமாக நிறைவடையாமல் முடிந்துள்ளன.

அத்துடன் மிக்கி ஆத்தருடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாமல் போவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நஜாம் சேத்தியின் நியமனம் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

>> அபிசேக்கின் அபார பந்துவீச்சுடன் சென். ஜோன்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

மிக்கி ஆத்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியினை ஏற்காது போயினும் பிரபலமான வேறு ஒரு பயற்சியாளர் அவ்வணிக்கு மிக விரைவில் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, சக்லைன் முஸ்தாக் தலைமையில் பாகிஸ்தானின் தற்காலிக பயிற்சியாளர்களாக செயற்பட்டு வரும் குழாத்தினது பதவிக் காலம் இம்மாத இறுதியில் நிறைவடையும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<