வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள, வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்திருந்ததுடன், இலங்கை லெஜன்ட்ஸ் அணி தங்களுடைய இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்தது. அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருந்ததுடன், இந்திய லெஜன்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தது.
>> கெய்ல் இலங்கைக்கு எதிராக களமிறங்கும் வாய்ப்பு!
பின்னர், கொவிட்-19 தொற்று காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதாக வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. அத்துடன், போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட்-19 தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணி இந்த தொடரில் பங்கேற்காது. அதற்கு பதிலாக பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளன.
புதிய அணிகளுடன் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மார்ச் 5ஆம் திகதி இந்திய லெஜன்ட்ஸ் அணி மற்றும் பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இலங்கை லெஜன்ட்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியை எதிர்கொள்வதுடன், தொடர்ந்து தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சனத் ஜயசூரிய, ரசல் ஆர்னல்ட், நுவான் குலசேகர மற்றும் தம்மிக பிரசாத் ஆகிய முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், அணிக்கு திலகரட்ன டில்ஷான் தலைமைத்தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் போட்டி அட்டவணை
- மார்ச் 6 – இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள்
- மார்ச் 8 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா
- மார்ச் 10 – இலங்கை எதிர் பங்களாதேஷ்
- மார்ச் 14 – இலங்கை எதிர் இங்கிலாந்து
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<