மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிய டெவோன் கொன்வே

England Tour of New Zealand 2024

62
England Tour of New Zealand 2024

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்களாலும் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14ஆம் திகதி ஹமில்டனில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டெவோன் கொன்வே 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். டெவோன் கொன்வே – கிம் தம்பதிக்கு இந்த வாரத்தில் முதலாவது குழந்தை பிறக்க உள்ளதால் அவர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன் சேர்க்கப்பட்டுள்ளார். ஹொங்கொங்கை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது சகலதுறை வீரரான இவர், நியூசிலாந்து அணிக்காக இதுவரை 26 ஒருநாள் மற்றும் 78 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இருப்பினும், இந்திய அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற வரலாற்று டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வில் யங், டெவோன் கொன்வேயின் இடத்தை நிரப்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<