டெர்பிஷயர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சுரங்க லக்மால்

Sri Lanka Cricket

316
Suranga Lakmal

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கிலாந்து கௌண்டி அணியான டெர்பிஷயர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக அனைத்துவகை போட்டிகளிலும் விளையாடியுள்ள சுரங்க லக்மால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்றைய தினம் (02) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

>> சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சுரங்க லக்மால்

குறித்த அறிவித்தலையடுத்து, இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடர் நிறைவடைந்தவுடன் சுரங்க லக்மால் டெர்பிஷயர் அணியுடன் இணைந்துக்கொள்வார் என அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில், அவருடைய வீசா தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக டெர்பிஷயர் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுரங்க லக்மால் இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளில் பிரதானமான வீரராக இருந்த போதும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், ஒருநாள் போட்டிகளில் 109 விக்கெட்டுகளையும், T20I போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், இறுதியாக நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இவர் இருந்ததுடன், அந்த அணி கிண்ணத்தையும் வெற்றிக்கொண்டது. எனவே, எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் டெர்பிஷயர் அணிக்காக  அனைத்துவகை போட்டிகளிலும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கழகத்தில் இணைவது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுரங்க லக்மால், “கௌண்டி போட்டிகளில் விளையாடும் அனுபவத்தை பெறுவது எனது நீண்ட கால எண்ணமாக இருந்தது. அத்துடன், மிக்கி ஆர்தருடன் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு கிடைத்த வாய்ப்பை, என்னால் மறுக்க முடியாது.

அதேநேரம், எனது நாட்டுக்காக விளையாடிய ஒவ்வொரு நொடிகளையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டேன். எனது கனவுகளுக்கான வாய்ப்பை கொடுத்த இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றிகள். இந்த புதிய சவால் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். அதுமாத்திரமின்றி டெர்பிஷயர் அணிக்கான பிரகாசிப்பை கொடுத்துவரும் இளம் பந்துவீச்சாளர்களுக்கு என்னுடைய அனுபவத்தை பகிர முடியும் என நினைக்கிறேன்” என்றார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர், சுரங்க லக்மால் இணைந்துள்ள டெர்பிஷயர் கழகத்தின் கிரிக்கெட் தலைமையாளராக பணிபுரிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<