கிருஷாந்தினியின் இரட்டை கோல் வீண்: குவாமிடம் வீழ்ந்தது இலங்கை

956
Sri Lanka v Guam – AFC U16

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (AFC) 16 வயதின்கீழ் பெண்களுக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் தொடரின் A குழுவுக்கான தமது முதல் ஆட்டத்தில் இலங்கை அணி குவாம் அணியிடம் 4-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

கொழும்பு CR&FC மைதானத்தில் இன்று (15) ஆரம்பமான இந்த தகுதிகாண் சுற்றின் A குழுவுக்கான போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் ஜோர்தான் மற்றும் உஸ்பகிஸ்தான் அணிகள் மோதின. இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டம் கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் நிறைவுற்றது.

16 வயதின் கீழ் தேசிய கால்பந்தாட்ட அணியில் ஆறு வட மாகாண மாணவிகள்

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின்…

தொடர்ந்து இலங்கை மற்றும் குவாம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று மாலை அதே மைதானத்தில் ஆரம்பமானது.

இலங்கை முதல் பதினொருவர்

ஜெகநாதன் ஜெதுன்சிகா, தஷானி ஜயகடு, நிமேஷா பண்டார, செனுரி பண்டார, அமானி சேனாதீர, உத்பலா ஜயகொடி, ரகுதாஸ் கிருஷாந்தினி, சதுனி குமாரிஹாமி, பசிதி தசனாயக, மதுஷானி குமாரி, தசுனி ஹன்சிகா

போட்டியின் ஆரம்பம் முதல் வேகம் காண்பித்த குவாம் வீராங்கனைகள் ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் தமக்கான முதல் கோலைப் பெற்றனர். அவ்வணியின் ஜடா எலிஸ் ஹான் இலங்கை அணியின் பெனால்டி பெட்டிக்கு வெளியில், மைதானத்தின் இடது புறத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்து இலங்கை அணியின் கோல் காப்பாளரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவியுமாகிய ஜெகநாதன் ஜெதுன்சிகாவின் தலைக்கு மேலால் வலைக்குள் சென்றது.

முதல் கோல் பெறப்பட்டு இரண்டு நிமிடங்களில் இலங்கை அணியினருக்கு எதிரணியின் கோலுக்கு நேர் எதிரே பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை இலங்கை தரப்பு சிறப்பாகப் பயன்படுத்தவில்லை.

மீண்டும் 19ஆவது நிமிடத்தில், இலங்கை அணியின் பெனால்டி எல்லையில் இருந்து குவாம் வீராங்கனை ஜேடின் ரைலி வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து எந்தத் தடையும் இன்றி கோலுக்குள் செல்ல, விருந்தினர்கள் இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு குவாம் தரப்பினரின் கால்களிலேயே அதிகம் பந்து இருந்தது. அவற்றைத் தடுத்து ஆட முயற்சித்த இலங்கை மங்கையர்களால், சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது.

நாணய சுழற்சியில் சாப் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

தற்பொழுது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்றுவரும்…

35ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் ஒரு கோணர் திசையில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை ஜடா எலிஸ் ஹான் கோலுக்குள் செலுத்துகையில் ஜதுன்சிகா அதனைப் பிடித்துக்கொண்டார்.

எனினும், போட்டியில் மேலும் முன்னேற்றம் காணும் விதத்தில் குவாம் வீராங்கனை மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை, இலங்கை அணியின் கோலுக்கு அண்மையில் இருந்து பின்கள வீரர்கள் தடுத்தனர்.

இவ்வாறான ஒரு நிலையில், முதல் பாதியின் இறுதித் தருவாயில் எதிரணியின் கோல் திசையில் இருந்து பந்தைப் பெற்ற யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை வீராங்கனை ரகுதாஸ் கிருஷாந்தினி, கோல் நோக்கி உருட்டி உதைந்த பந்து குவாம் கோல் காப்பாளரின் கைகளுக்குள்ளால் கோலுக்குள் செல்ல, இலங்கை அணியின் கோல் கணக்கு ஆரம்பமாகியது.

முதல் பாதி:  இலங்கை 1 – 2 குவாம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 6 நிமிடங்கள் சென்று இலங்கை அணிக்கு கோலுக்கான மிகச் சிறந்த வாய்ப்பொன்று கிடைத்தது. குவாம் கோல் காப்பாளர் பியார்ரா லீ முன்னோக்கி வந்து பந்தைத் தடுக்க, பந்து அவரது கையில் இருந்து நழுவி கோல் திசைக்கு வந்தது. இலங்கை வீராங்கனைகள் மீண்டும் கோலுக்கான முயற்சியை மேற்கொள்ளும்போது, அவசரமாக செயற்பட்ட லீ இலங்கைத் தரப்பிடம் இருந்து பந்தைப் பற்றிக்கொண்டார்.

அடுத்த நிமிடம் குவாம் அணிக்கு இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்த ஜேடின் ரைலி மற்றொரு கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தெடர்ந்து போட்டியில் விறுவிறுப்படைந்த இலங்கை வீராங்கனைகள் தமது வேகத்தையும் அதிகரித்தனர். இதனால் எதிரணியிடமிருந்து பந்தைப் பரித்து கோலுக்கான பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். எனினும், இறுதித் தருவாயில் நிகழ்ந்த தவறுகளால் பால வாய்ப்புகள் வீணாகின.

இவ்வாறான ஒரு நிலையில், ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் முன்களத்தில் இருந்து பந்தை இலகுவாக கோலுக்குள் செலுத்தி குவாம் அணித் தலைவி ஜினேய் அணிக்கான 4ஆவது கோலையும் பெற்றார். இதன்போது இலகுவாக வந்த பந்தை ஜதுன்சிகா தடுப்பதற்குத் தவறினார்.

அடுத்த 2 நிமிடங்களில் அந்த கோலுக்கான பதில் கோலை கிருஷாந்தினி இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்து, தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் இருந்து கோலின் வலது புறத்தினால் உதைந்த பந்து குவாம் கோல் காப்பாளரின் கைளில் பட்டு வலைக்குள் சென்றது.

தொடர்ந்த நிமிடங்களில் இரு அணியினரும் சம அளவில் மோதிய போதும், கோல்கள் பெறப்படாத நிலையில், ஆட்டத்தின் நிறைவில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் குவாம் அணி வெற்றி பெற, இலங்கை அணி தமது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி இந்தத் தொடரின் தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஜோர்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

முழு நேரம்இலங்கை 2 – 4 குவாம்

கோல் பெற்றவர்கள்

இலங்கை – ரகுதாஸ் கிருஷாந்தினி 45+1′ & 67′

குவாம் – ஜடா எலிஸ் ஹான் 10′, ஜேடின் ரைலி 19′ & 54′, ஜினேய் 65′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<