இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் புகாரை விசாரிக்கவுள்ள ஐ.சி.சி

2153

இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசடைகின்ற நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேவையில்லாத பயிர்களை எரித்து விடுகின்றனர். இதனால் காற்றில் கலக்கின்ற புகை டெல்லிக்கு அச்சுறுத்தலாக மாறுவதாக மத்திய காற்று மாசுபாட்டு கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், டெல்லியில் மோசமான அளவில் காற்று மாசடைவதை காணமுடிகின்றது. மதியம் ஒரு மணியளவில் இதன் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் வருடத்தின் இறுதிப் பகுதியில் அதிகாலையில் தொடங்கும் பனிமூட்டமானது சில நாட்களில் பிற்பகல் வரை நீடிக்கின்றது. வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையானது பனிமூட்டத்தில் கலந்து கரும் புகையாக காற்றில் கலந்து வருகின்றதால் அங்குள்ள மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் டெல்லியின் பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது.

ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு

இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால்ல்…

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது மைதானதம் முழுவதும் நிலவிய மாசடைந்த காற்று காரணமாக சுவாசிப்பதில் சிரமப்படுவதாகத் தெரிவித்து இலங்கை வீரர்கள் மூக்குறை அணிந்து விளையாடியமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மைதானத்தில் இருக்கும் நபர்களைக் கூட சரியாக பார்க்க முடியாத அளவுக்கு காற்றுமாசு அங்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக வீரர்கள் சுவாசிப்பது தொடங்கி, விளையாடுவது வரை அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. புகையோ புகை டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவியது.

இதன் காரணமாக முதல் நாள் போட்டியில் வீரர்கள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மூடிக்கொண்டு விளையாடினார்கள். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் இதே மைதானத்தில் நடைபெறவிருந்த ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் அதிக மாசடைந்த காற்று காரணமாக பிற்போடப்பட்டன.

அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி அரை மரதன் போட்டிகளிலும் பங்கேற்ற 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களுக்கு இதன் அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கண் எரிச்சல், தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டதாக அதில் கலந்துகொண்ட வீரர்கள் புகார் அளித்தனர்.

முன்னதாக நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளையும் அங்கு நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து தொடரிலும் டெல்லி டைனமோரஸ் மற்றும் ஜெம்சத்பூர் அணிகளுக்கிடையில் டெல்லியின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவிருந்த லீக் போட்டிக்கும் இந்த மாசடைந்த காற்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், பல வெளிநாட்டு வீரர்கள் மூக்குறை அணிந்து பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தமை ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்தது.

எனவே, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த டெல்லியின் மாசடைந்த காற்று விவகாரம், தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவை வரை சென்றுள்ளமை கிரிக்கெட் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

இலங்கை வீரர்கள் புறக்கணிப்பு

மாசுபட்ட காற்று காரணமாக மதிய போசண இடைவேளையின் பின்னர் இலங்கை வீரர்கள் மூக்கை மறைக்கும் கவசம் (அரை முகமூடி) அணிந்து விளையாடினர். மைதானத்தில் கரும்புகை சூழ்ந்திருந்ததால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக இலங்கை அணியினர் போட்டி மத்தியஸ்தரிடம் புகாரிட்டனர். இதனை அடுத்து சுமார் 17 நிமிடங்கள் போட்டி தடைப்பட்டது.

இலங்கை அணியின் போராட்டம் ஒரு நாள் தொடரில் எவ்வாறு அமையும்?

ஒருவரின் உண்மையான தோல்வி என்பது, அவர் விருப்பம் கொண்ட விடயத்தில் எந்த வித முயற்சிகளையும்…

நடுவர்கள், இலங்கை அணி வீரர்கள், இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட அனைவரும் மைதானத்துக்கு விரைந்து சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

மேலும் இலங்கை அணியின் உடற்தகுதி பயிற்சியாளர் நில் லீ மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் மனோஜ் அபேவிக்ரம ஆகியோர் இலங்கை வீரர்களின் ஜேர்சியை அணிந்துகொண்டு மைதானத்துக்கு வந்து நடுவரிடம் இது குறித்து முறையிட்டார். வீரர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். அத்துடன் இலங்கை அணியின் 4 வீரர்கள் சுவாசிக்க முடியாமல் வாந்தி எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் சுரங்க லக்மால், லஹிரு கமகே, தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய வீரர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

எனினும், நடுவர்கள் இலங்கை அணியின் கோரிக்கைக்கு சம்மதிக்காததால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இடைநடுவே இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் மைதானத்தைவிட்டு முதலாவதாக வெளியேறினார். இவரையடுத்து பந்துவீசிக்கொண்டிருந்த லஹிரு கமகேயும் சுவாசிக்க முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார். அவரின் எஞ்சிய பந்துகளை லக்‌ஷான் சந்தகன் வீசினார். இதனையடுத்து களத்தடுப்பில் 10 வீரர்கள் ஈடுபட்டனர். எனவே அணிக்காக மேலும் உதிரி வீரர்கள் இல்லையென சந்திமால் நடுவர்களுக்கு அறிவித்தார்.

இந்நிலையில் 3 பந்துகள் வீசப்பட்ட இலங்கை அணி வீரர்கள் மீண்டும் பழையபடி புகார் அளித்தனர். இந்த நிலையில் கோஹ்லி கோபப்பட்டு துடுப்பு மட்டையை (bat) தூக்கி வீசி எறிந்தார். அதன் பிறகு சந்தகனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த கோஹ்லி சில நேரத்தில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தார். அதன்படி போட்டியை நிறுத்த வேண்டாம் இன்னிங்சை நிறுத்திக் கொள்கிறோம் என்று கூறினார்.

பொதுவாக சீரற்ற காலநிலை, போதிய வெளிச்சமின்மை, மின்னல், மழை அல்லது ரசிகர்கள் குழப்பம் போன்ற காரணங்களுக்காகவே போட்டிகள் தடைப்படுவதுண்டு. ஆனால் காற்று மாசுபாடு காரணமாக போட்டி ஒன்று தடைப்பட்டதாக இதற்கு முன்னர் கேள்விப்படவில்லை. எனவே சர்வதேச கிரிக்கெட்டில் மாசடைந்த காற்றினால் இந்த மாதிரி பாதுகாப்பு உறைகளைக் கொண்டு மூக்கை மறைத்தவாறு வீரர்கள் விளையாடியது இது முதல் முறையாகும்.

எனினும், போட்டியின் நான்காவது நாளிலும் இலங்கை அணி வீரர்கள் மூக்குறை அணிந்து விளையாடியது, சுரங்க லக்மால் மைதானத்தில் வாந்தி எடுத்தது உள்ளிட்ட சம்பவங்கள் அந்த மைதானத்தில் தொடர்ந்து விளையாடுவதற்கு பொருத்தமில்லை என்பதை உணர்த்தியது. இதில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிக் கொண்டிருக்கும்போது 6ஆவது ஓவரில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் மைதானத்திலேயே வாந்தி எடுத்தார்.

இதனையடுத்து இலங்கை அணியின் உடற்தகுதி நிபுணர் மைதானத்துக்கு விரைந்து சுரங்க லக்மாலை ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 11ஆவது ஓவரில் சுரங்க லக்மால் மீண்டும் போட்டியில் இணைந்து கொண்டார். எனினும், அன்றைய தினம் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான இலங்கை வீரரகள் மூக்குறை அணிந்துகொண்டு விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர்களுக்கு குற்றச்சாட்டு

இவ்வாறு இலங்கை வீரர்கள் சுவாசிக்க முடியாமல் மைதானத்தில் அவதிப்பட்டாலும், மறுபுறத்தில் இலங்கை வீரர்கள் நாடகமாடி போட்டியை நிறுத்துவதற்கு முற்பட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஷேவாக், கங்குலி உள்ளிட்ட வீரர்களும், அந்நாட்டின் ஊடகங்களும் குற்றம் சுமத்தியிருந்தன.

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை…

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மைதானத்திற்குள் இலங்கை வீரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்திருந்தார். இதேபோன்று இலங்கை வீரர்கள் துடுப்பெடுத்தாடிய போதும் பாதுகாப்பு உறைகளை அணியவில்லை. இந்திய வீரர்களும் சிரமமின்றி களத்தடுப்பில் ஈடுபடுவதை காண முடிந்தது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ”விராட் கோஹ்லி கிட்டத்தட்ட 2 நாட்கள் முழுமையாக துடுப்பெடுத்தாடியிருந்தார். அவருக்கு எந்த மூக்குறையும் தேவைப்படவில்லை. இவ்வாறான நிலைமை இரு அணிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் எங்களது வீரர்களுக்கு இதில் எந்த உடல்நலக்கோளாறும் வரவில்லை” என்றார்.

இதேவேளை, டெல்லியின் மாசடைந்த காற்றானது டெஸ்ட் போட்டிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நான் டெல்லியைப் பிறப்பிடமாகக் கொண்டவன். இந்த மாதத்தில் காற்று மாசடைவது அதிகமாகக் காணப்படுவதுடன், அதிகளவு உஷ்ணமும் இருக்காது. ஒருவேளை போதியளவு சூரிய வெளிச்சம் இருந்தால் இவ்வாறு காற்று மாசடைவது குறைவாக இருக்கும். எனினும், இங்கு கிரிக்கெட் விளையாடுவது பொருத்தமில்லை என நான் கருதவில்லை.

எமது அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களும் டெல்லியில் நிலவுகின்ற இந்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்ததில்லை. எனினும், அவர்களும் தமக்கு வழங்கப்பட்ட பணியை செய்வதற்கே இங்கு வந்திருக்கின்றார்கள். ஆனால் டெல்லியில் கிரிக்கெட் விளையாடும்போது இந்நிலைமை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

இருந்தபோதிலும், டெல்லியில் மாசுபட்ட காற்று இல்லை என நான் ஒருபோதும் கூறமாட்டேன். அதை நான் 100 சதவீதம் ஏற்றுக்கொள்கின்றேன் என்றார்.

இந்திய வீரர்களும் அவதி

இந்நிலையில், போட்டியை இடைநிறுத்துமாறு இலங்கை வீரர்களால் கோரிக்கை முன்வைப்பதற்கு முன்னதாகவே இந்திய அணியின் உதிரி வீரரான குல்தீப் யாதவ், மைதானத்தில் நுழையும்போது மூக்கை மூடிய பாதுகாப்பு உறை அணிந்திருந்தமை இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. மேலும், மதிய போசண இடைவெளையின்போது ஓய்வறையிலிருந்த இந்திய வீரர்களான ரோஹித் சர்மாவும், குல்தீப் யாதவ்வும் மூக்குறை மூலம் மூக்கை மூடியிருந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனை அவதானித்த பின்னரே உடற்கூற்று நிபுணரை அனுப்பி இலங்கை வீரர்களுக்கான மூக்குறைகளை பெற்றுக்கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், போட்டியின் நான்காவது நாளில் இலங்கை அணி தனது 2ஆவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சமியும் மைதானத்திற்குள் வாந்தி எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை

இந்த நிலையில் தற்போது டெல்லி புகை மற்றும் மாசடைந்த காற்று மீது பலர் குற்றம்சாட்டி உள்ளனர். இனி குளிர்காலத்தில் டெல்லியில் விளையாட்டு போட்டிகள் நடத்தக் கூடாது என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் டெல்லி சுற்றாடல் கட்டுப்பாட்டுச் சபை தலையிட்டது. அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கும் போது எவருடைய அனுமதியுடன் கிரிக்கெட் போட்டியை நடத்தினீர்கள் என்று அந்த சபை கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மருத்துவர்கள் சில வீரர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

BCCI இற்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

இந்தியா – இலங்கை போட்டியில் மாசடைந்த காற்று காரணமாக பிரச்சினை எழுந்ததையிட்டு இந்திய மருத்துவ சங்கம் BCCI இற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இதில், மாசடைந்த காற்று விளையாட்டு வீரர்களின் உத்வேகம் மற்றும் செயற்பாட்டினை குலைத்து விடுகிறது. இது வெற்றி மற்றும் தோல்வியை மயிரிழையில் மாற்றி விடும். அத்தோடு இங்கு தொடர்ந்து விளையாடுவது வீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

தனன்ஞயவின் சதத்தோடு டெல்லி டெஸ்டை சமப்படுத்திய இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி,

மழை, வெளிச்சம் குறைபாடு ஆகியவற்றை ஒரு போட்டிக்கு முக்கியமானதாக நீங்கள் கருதுகிறீர்களோ அதே போன்று, மாசடைந்த காற்றும் ஒரு காரணியாக இனி கருத வேண்டும் என அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.

 ICC இடம் புகார்

எனவே இவ்விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ICC) இலங்கை கிரிக்கெட் சபை புகார் அளித்தது.

அத்துடன், இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை, BCCI இடம் விளக்கம் கோரியுள்ளது.

இப்போட்டிக்காக அதிக அளவில் மாசு காணப்படுகின்ற டெல்லியின் பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தை ஏன் தெரிவுசெய்தீர்கள்? இதுதொடர்பில் முன்னதாக ஏன் அறிவிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை விளக்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பதிலளித்த BCCI நிர்வாகம், இலங்கை வீரர்கள் தேவையில்லாமல் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்துவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

”மைதானத்திற்கு வந்த 20 ஆயிரம் ரசிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்திய வீரர்களும் இயல்பாகவே உள்ளனர். ஆனால் இலங்கை அணியினர் மட்டும் பிரச்சினையை ஏற்படுத்துவது வியப்பாக உள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேசுவோம்” என்று இந்திய கிரிக்கெட் சபையின் பொறுப்பு தலைவர் அனில் கண்ணா தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், டெல்லியில் மாசடைந்த காற்றுடன் கூடிய நிலைமை இருந்த போது விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாசடைந்த காற்றால் 4 வீரர்களுக்கு வாந்தி ஏற்பட்டதுடன், உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.

இதுபோன்ற சூழலில் எங்களால் விளையாட முடியவில்லை. இதை நாங்களும் ICC இடம் புகாராக அளித்துள்ளோம். ICC தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. ஆனாலும் ICC இன் நடவடிக்கை என்பது நிச்சயமற்றதே என்றார்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கருதப்படும் அளவைவிட காற்று மாசுபாடு பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக டெல்லியிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரக இணையத்தளமும் அறிக்கையொன்றை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. எனினும், மாசடைந்த காற்றினால் ஆஸ்த்மா தாக்கம், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, வலிப்பு என்பன ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக இந்திய வைத்திய சங்கம் எச்சரித்துள்ளதுடன், அங்கு விளையாடுவதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும், டெல்லியில் காற்று மாசடைதலானது 18 மடங்கைவிட அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் காற்றுமாசடைதல் பிரிவு அண்மையில் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடக்காது

இந்த நிலையில் தற்போது டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் 2020 வரை அங்கு நடத்துவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் இந்த முடிவு மாசடைந்த காற்று காரணமாக எடுக்கப்படவில்லை எனவும், ஏனைய மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இனிவரும் காலங்களில் டெல்லி பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2020ஆம் ஆண்டுதான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம், மாசடைந்த காற்று கிடையாது. இந்திய கிரிக்கெட் சபை சுழற்சி முறைப்படிதான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020ஆம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

.பி.எல் போட்டிகள் மாற்றம்

தற்போது டெல்லியில் எந்தவொரு ஐ.பி.எல் போட்டிகளும் நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள 11ஆவது ஐ.பி.எல் தொடரில் டெல்லியில் எந்த போட்டியும் நடத்தப்படாது. மேலும் டெல்லி அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட இருப்பதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ICC விசாரணை

இந்தியா – இலங்கை டெஸ்ட் போட்டியில் மாசடைந்த காற்று பிரச்சினை எழுந்ததையடுத்து இலங்கை கிரிககெட் நிறுவனம் ஐ.சி.சி இடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் டுபாயில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கவும், உரிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐ.சி.சி நேற்று (09) அறிவித்தது.

இந்நிலையில், ஐ.சி.சி இன் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், டெல்லியில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்ற சூழலை ஐ.சி.சி இன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐ.சி.சி இன் மருத்துவக்குழு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது. எதிர்காலத்திலும் இதுபோன்ற நிலைமைகளை தடுக்கும் நோக்கில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் டுபாயில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்த டெல்லி டெஸ்ட் போட்டிக்குத் தடையாக இருந்த டெல்லியின் மாசடைந்த காற்றுடன் கூடிய சுற்றாடல் குறித்து ஐ.சி.சி உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமா? இனிமேலும் அங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.