ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்றுனர் கைது

101
IPLT20.COM / MSN

இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. போட்டிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் துஷார் அரோத் உள்ளிட்ட 19 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய திமுத் கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அபராதம்

இலங்கை டெஸ்ட் அணியின் தற்காலிக …..

ஐ.பி.எல். தொடரில் கடந்த திங்கட்கிழமை (01) கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இறுதியாக 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

இந்தநிலையில், குறித்த போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் துஷார் அரோத் மற்றும் அவருடைய சகாக்களான ஹேமங் பட்டேல் மற்றும் நிஷ்சல் மிதா உள்ளிட்ட 19 பேரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் பொலிஸார் தெளிவுப்படுத்துகையில், துஷாருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் (Cafe) ஒன்றில், ஐ.பி.எல். போட்டி பெரிய திரையொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், அங்கிருந்த நபர்கள் தங்களுடைய கைத்தொலைபேசியில் உள்ள செயலிகள் (Apps) மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், சிலர் குறித்த வர்த்தக நிலையத்தின் (Cafe) அருகில் இருந்து செயலி மூலம் இணைய வசதி வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் குறித்த 19 நபர்களது கைத்தொலைபேசிகளை ஆராய்ந்த போது, மூன்று விதமான செயலிகள் ஊடாக சூதாட்டம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது. அத்துடன், துஷார் அரோத்தின் சகாவான ஹேமங் பட்டேலிடம் விசாரணை மேற்கொண்ட போது, குறித்த இடத்தில் ஐ.பி.எல். சூதாட்டம் இடம்பெற்றதை ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சூதாட்டத்தில் கல்லூரி மாணவர்களும் இருந்தாக பொலிஸார் தெரிவித்ததுடன், அனைவரது கைத்தொலைபேசிகளும் கையகப்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினர். எனினும், கைதுசெய்யப்பட்ட அனைவரும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், அவர்களின் கைத்தொலைபேசிகள் மற்றும் வாகனங்கள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

16 வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகிய பிரயாஸ் ராய் பர்மன்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) வரலாற்றில் ……

இதேவேளை, குறித்த சூதாட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் துஷார் அரோத் குறிப்பிடுகையில், “நான் எனது வர்த்தக நிலையத்துக்கு வந்த 20 நிமிடங்களில் பொலிஸார் வருகைத்தந்தனர். எனது கைத்தொலைபேசியை ஆராய்ந்தனர். அதில், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கான எந்தவொரு செயலியும் இருக்கவில்லை. என்னை கைது செய்தார்கள். ஆனால், ஏன் என்னை கைது செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

எனது வர்த்தக நிலையத்துக்கு வந்திருந்த சில வாடிக்கையாளர்கள், கைத்தொலைபேசியில் உள்ள செயலி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வாடிக்கையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை நான் எப்படி அறிவேன்? ஹேமங் பட்டேல் எனது வர்த்தக நிலையத்தில் உள்ள ஒரு பங்குதாரர். அவர் எப்பொழுதும் அவருடைய நண்பர்களுடன் இருப்பார். அவர், சூதாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் நான் அறியவில்லை. நான் எந்தவித சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை” என்றார்.

துஷார் அரோத் சூதாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துக்கொடுத்துள்ளார் என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<