மலையக சமரில் கிறிஸ்டல் பெலஸை வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்

440

நடைபெற்று வரும் டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரில் பலப்பரீட்சை நடாத்திய மலையக அணிகளான அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DCL சம்பியன் கொழும்பு அணியை வீழ்த்திய சோண்டர்ஸ் எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டியில்

நாவலப்பிட்டி ஜயதிலக விளையாட்டரங்கில் இன்று (25) இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் வாய்ப்பை கிறிஸ்டல் பெலஸ் அணி கோணர் உதையின்போது பெற்றது. இதன்போது ஐஸக் அபா உள்ளனுப்பிய பந்து கோல் கம்பங்களினூடாக உள்ளே நுழையும் போது அப் கண்ட்ரி லயன்ஸ் கோல் காப்பாளர் சிறந்த முறையில் பந்தை தட்டி விட்டார்.  

தொடர்ந்து போட்டியின் 13 ஆவது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணிக்கு கிடைக்கப் பெற்ற கோணர் வாய்ப்பை எதிரணி வீரர்கள் தடுத்தாடியபோது குமார மூலம் வலது பக்க மூலையிலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை அவ்வணியின் முன்கள வீரர் பைஸல் ரமீஸ் தனது தலையால் முட்டி கோலாக்கினார்.

போட்டியை சமப்படுத்த வேகமாக விளையாடிய கிறிஸ்டல் பெலஸ் அணி வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைத்த வண்ணம் இருந்தன.

26 மற்றும் 27 ஆவது நிமிடங்களில் கிறிஸ்டல் பெலஸ் அணியின் முன்கள வீரர்களான பாஸித் மற்றும் ஆதில் ஆகியோருக்கு தொடராக கிடைக்கப் பெற்ற வாய்ப்புக்கள் வீணடிக்கப்படவே அப் கண்ட்ரி லயன்ஸ் அணியின் வீரர்கள் மீண்டும் தமது கட்டுப்பாட்டில் பந்தை வைத்தாடினார்.

வாய்ப்புக்கள் வீணாக சமநிலையில் நிறைவுற்ற சுபர் சன் – புளு ஸ்டார் மோதல்

இதன் பலனாக முதல் பாதியின் இறுதி தருணத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வீரர்களால் இரண்டாவது கோலும் பெறப்பட்டது. இதன் போது பந்தை கைப்பற்ற முன்னோக்கி வந்த எதிரணியின் கோல் காப்பாளரை தாண்டி முன்கள வீரர் ஜோன் எவன்ஸ் பந்தை சிறந்த முறையில் தூக்கி கோல் கம்பங்களிற்குள் உட்செலுத்தினார்.

முதல் பாதி: அப் கண்ட்ரி லயன்ஸ் 2 – 0 கிறிஸ்டல் பெலஸ்

மழையுடன் ஆரம்பித்த இரண்டாம் பாதியின் முதல் 5 நிமிடங்களின் போது அப் கண்ட்ரி அணியின் ஸரன்ராஜ் கோலை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பங்களில் பட்டு வெளியேறியது.

எதிரணியின் பெனால்டி எல்லையில் இருந்து கிறிஸ்டல் பெலஸ் வீரர் ஸாகிர் அஹமட் தனது பின் பாதங்களால் வழங்கிய பந்தை பெற்ற ஐஸக் அபா பந்தை தரை வழியாக தனது அணியின் சக வீரருக்கு வழங்க எத்தனித்தார். எனினும் எதிரணியின் பின்கள வீரர் சிறந்த முறையில் அதனைத் தடுத்தாடினார்.

போட்டியின் 60 ஆவது நிமிடத்தில் உபாதை காரணமாக கிறிஸ்டல் பெலஸ் அணியின் ஓரு வீரர் மைதானத்திலிருந்து வெளியேறிய தருணத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வீரர்களால் மற்றுமொரு கோலும் பெறப்பட்டது.

இதன்போது, சிறந்த முறையில் மத்திய களத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் பெனால்டி எல்லையிலிருந்து டேவிட் ஓபோரீ வழங்கிய பந்தின் மூலம் ஜோன் எவன்ஸ் தனது அணிக்காக அடுத்த கோலை பெற்றுக் கொடுத்தார்.  

Photos: Up Country Lions SC v Crystal Palace FC | Week 5 | Dialog Champions League 2018

தொடர்ந்து போட்டியில் கிறிஸ்டல் பெலஸ் அணி வீரர்கள் உத்வேகமாக விளையாடிய போதும் சிறந்த வாயப்ப்புக்களை அவ்வணி வீரர்களால் நீண்ட நேரமாக பெற முடியவில்லை.

எனினும், போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் ஐஸக் அபா எந்த வித பின்கள வீரர்களுமின்றி பெற்ற பந்தை கோலை நோக்கி எடுத்துச் செல்ல எத்தனித்த வேளையில் பந்தானது அவரது கைகளில் பட்டதாக கூறி நடுவரால் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

நடுவர் உபாதையீடு நேரத்துடன் (Injury Time) போட்டியை நிறைவு செய்யவே பெறப்பட்ட 3 கோல்களால் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். மறுமுனையில் கிறிஸ்டல் பெலஸ் அணி தமது இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்தது.

முழு நேரம்:  அப் கண்ட்ரி லயன்ஸ் 3 – 0 கிறிஸ்டல் பெலஸ்

கோல் பெற்றவர்கள்

  • அப் கண்ட்ரி லயன்ஸ் அணி – பைஸல் ரமீஸ் 13′, எவன்ஸ் 44′, 60′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க