டெஸ்ட்டுடன் ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு பெறும் டேவிட் வோர்னர்

115

சிட்னி டெஸ்ட்டின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறவிருந்த அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> அறிமுக வீரரை டெஸ்ட் அணித்தலைவராக மாற்றும் தென்னாபிரிக்கா

தமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா விளையாடி வருகின்றது. சிட்னியில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியோடு 37 வயது நிரம்பிய ஆரம்ப துடுப்பாட்டவீரரான டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடயங்கள் இவ்வாறிருக்க தனது ஓய்வு தொடர்பில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள டேவிட் வோர்னர், தான் டெஸ்டுடன் சேர்த்து  ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் வோர்னர் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரை ஒருநாள் போட்டிகளில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையிலையே ஒருநாள் போட்டிகளில் அவரது ஓய்வு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

இன்று (01) புத்தாண்டின் முதல் நாளில் ஊடக சந்திப்பு ஒன்றில் பேசியிருந்த டேவிட் வோர்னர் தான் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதனை உறுதிப்படுத்தியிருந்தார். ”நான் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகின்றேன்.” என டேவிட் வோர்னர் குறிப்பிட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் ஆறாம் இடத்தில் காணப்படும் டேவிட் வோர்னர் ஒருநாள் 161 போட்டிகளில் ஆடி 6932 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வோர்னர் ஒருநாள் போட்டிகளில் 45.30 என்கிற துடுப்பாட்ட சராசரியினை வெளிப்படுத்தியதோடு 22 சதங்களையும் பெற்றிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> இந்திய டெஸ்ட் குழாத்துடன் இணையும் வேகப்பந்துவீச்சாளர்

இதேவேளை டேவிட் வோர்னரின் பிரியாவிடை ஆட்டமாக அமையும் பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (03) ஆரம்பமாகுகின்றது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<