பாபர் அஸாமின் முதலிடத்தை பறித்த டாவிட் மலான்

371
Getty Images

அவுஸ்திரேலிய அணியுடனான டி20 சர்வதேச தொடரில் பிரகாசித்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டாவிட் மலான் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாமை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நேற்று (08) நிறைவுக்கு வந்தது. குறித்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை சுவைத்தது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆறுதல் வெற்றி

குறித்த  தொடர் நிறைவுபெற்ற நிலையில் வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில், ஒரு அரைச்சசத்துடன் 129 ஓட்டங்களை குவித்து குறித்த தொடரில் அதிக குவித்த இங்கிலாந்து அணி வீரர் டாவிட் மலான் நான்கு நிலைகள் உயர்ந்து 877 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் இதுவரை காலமும் முதலிடத்தில் நீடித்த பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் பாபர் அஸாம் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 

தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களை குவித்த ஆஸி. அணித்தலைவர் ஆரோன் பின்ச் தொடர்ந்தும் மூன்றாமிடத்தில் நீடிக்கின்ற அதேவேளை, சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வெல் ஆறாமிடத்தில் நீடிக்கின்றார். நேற்றைய இறுதி டி20 போட்டியின் போது அரைச்சதம் கடந்து இங்கிலாந்து அணி சார்பாக அதிக ஓட்டங்களை குவித்த ஜொனி பெயர்ஸ்டோ 3 நிலைகள் உயர்ந்து 19ஆவது இடத்திற்கும், டி20 தொடரின் ஆட்டநாயகனாக தெரிவாகிய இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர் 12 நிலைகள் உயர்ந்து 28ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். 

தொடரில் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரான இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் இரு நிலைகள் உயர்ந்து ஏழாமிடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸி. அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்டன் ஏகார் தொடர்ந்தும் மூன்றாமிடத்தில் நீடிக்கின்றார். மேலும் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் பத்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மற்றொரு இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ்

டி20 சகலதுறை வீரர்களுக்கான புதிய தரவரிசையில் ஆஸி. வீரர் கிளேன் மெக்ஸ்வெல் 220 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலிருந்து இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றினாலும் அவுஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியை பெற்றதன் அடிப்படையில் 275 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது டி20 போட்டியின் பின்னர் இங்கிலாந்து அணி முதலிடத்திலிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய டி20 தரவரிசையில் இலங்கை அணி மாற்றம் எதுவுமின்றி 230 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் ஏழாமிடத்தில் நீடிக்கிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<