மெய்வல்லுனர் அரங்கிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் நதீகா

287
Nadeeka Lakmali to bid farewell at National Sports Festival

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் தேசிய சம்பியனான நதீகா லக்மாலி, 23 ஆண்டு கால தனது மெய்வல்லுனர் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.

தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 43 வயதான நதீகா 51.84 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எச்.பி.பி.எச் மதுவந்தி 50.39 மீட்டரைப் பதிவு செய்து இரண்டாமிடத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டி.எம்..ஹசந்தி 42.89 மீட்ட்ரைப் பதிவு செய்து மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 

இலங்கையின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனையான நதீகா லக்மாலி, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளுடன் மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் 

இலங்கையின் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீராங்கனைகளில் ஒருவரான நதீகா லக்மாலி, 23 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கான ஈட்டி எறிதலில் முன்னணி வீராங்கனையாக வலம் வருவதுடன், தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஈட்டி எறிதலில் 10 தடவைகள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் 

2003 தேசிய விளையாட்டுப் போட்டியில் 44.87 மீட்டர் தூரத்தை எறிந்து தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்ற அவர், அதன் பின்னர் 2006, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் 

இவ்வாறு தேசிய ரீதியில் பல வெற்றிகளை ஈட்டிய அவர், 2008 பிஜீங் ஒலிம்பிக் விளையாட்டு விழா மற்றும் 2013 மொஸ்கோவில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக சுசந்திகா ஜயசிங்கவுக்குப் பிறகு, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (2013 – மொஸ்கோ) தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே இலங்கையர் என்ற பெருமையையும் நதீகா லக்மாலி பெற்றுக் கொண்டார் 

2013 (புனே) மற்றும் 2007 (அம்மான்) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றார் 

2 தெற்காசிய விளையாட்டு விழாக்களில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நதீகா, 2019இல் நடைபெற்ற உலக இராணுவ விளையாட்டு விழாவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் 

இந்த நிகழ்வில் அவரது சிறந்த தூரப் பெறுமதி 60.64 மீட்டர் ஆகும். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய மெய்வல்லுனர் போட்டிச் சாதனையை 12 ஆண்டுகளாக அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதுமாத்திரமின்றி, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரின் 3 அத்தியாயங்களிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார்.Nadeeka Lakmali to bid farewell at National Sports Festival

எல்பிட்டியவைப் பிறப்பிடமாகக் கொண்ட நதீகா, கஹதுவ மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டதுடன், அவரது பயிற்சியாளர் பத்மகுமார ரணதுங்க ஆவார் 

இந்த நிலையில், தனது பிரியாவிடைப் போட்டி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், எனது பிரியாவிடைப் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். 

கடந்த 17 ஆண்டுகளாக எனது தேசிய சாதனையை என்னால் பாதுகாக்க முடிந்தது, அது ஒரு பெரிய சாதனையாகும் என தற்போது இலங்கை இராணுவத்தில் வாரண்ட் அதிகாரியாக பணிபுரியும் நதீகா லக்மாலி மேலும் தெரிவித்தார். 

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<