ரஷீட் கான் – குணத்திலக்க இடையே என்ன நடந்தது?

2275

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றிருந்த ஆசியக் கிண்ண சுபர் 4 மோதலில், இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் தனுஷ்க குணத்திலக்க மற்றும் ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரம் ரஷீட் கான் ஆகியோர் இடையே சிறு வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டிருந்தது அவதானிக்கப்பட்டிருந்தது.

எதிர்பார்ப்பை தூண்டியுள்ள போட்டியில் மோதும் இலங்கை – இந்தியா!

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று (06) தமது சுபர் 4 சுற்று மோதலில் இந்தியாவை எதிர்கொள்கின்றது. இந்தப் போட்டிக்கு முன்னர் NewsWire ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட தனுஷ்க குணத்திலக்க, ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியின் போது தனக்கும், ரஷீட் கானுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பற்றியும் குறிப்பிட்டார்.

மைதானத்தில் ரஷீட் கானின் ஓவருக்கு தனுஷ்க குணத்திலக்க பௌண்டரி ஒன்றினை விளாசியதன் பின்னர் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பௌண்டரியினை  அடுத்து இருவரும் மைதானத்தின் நடுவே வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் களத்தில் இருந்த ஏனைய துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ இருவரினையும் சமரசம் செய்திருந்தார்.

தனுஷ்க குணத்திலக்க இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, இந்த வாக்குவாதம் தனக்கு எதிராக ரஷீட் கான் ஏதோ கூறியது தொடர்பில் சந்தேகித்தததன் காரணமாக ஏற்பட்டதாக குறிப்பிட்டதோடு இது இருவருக்கும் இடையிலான தவறான புரிதல் எனத் தெரிவித்திருந்தார்.

”ரஷீட் கான் எனக்கு ஏதோ சொன்னார் என்று புரிந்துகொண்டேன். பின் அவவரிடம் சென்று என்ன சொன்னீர் என்று கேட்க, அவர் தனது சக வீரருக்கே வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார். பின்னர் நான் அவரிடம் எனது தவறான புரிதலுக்காக வருத்தம் தெரிவித்தேன். இவ்வளவுதான் அங்கே நடந்தது.”

இதேநேரம், இந்திய அணியுடனான போட்டி தொடர்பில் கருத்து வெளியிட்ட தனுஷ்க குணத்திலக்க, இந்திய அணிக்கு எதிரான மோதலில் வெற்றி பெறும் போது 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு 95% இற்கு அதிகமாக உறுதியாகும் என்பதனால், அப்போட்டியில் வெற்றி பெற தாம் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆரம்பத் துடுப்பாட்டவீரராக விளையாடும் தனுஷ்க குணத்திலக்க ஆசியக் கிண்ணத் தொடரில் 4ஆம் இலக்கத்தில் களம் இறங்குகின்றார். இந்த துடுப்பாட்ட வரிசை மாற்றம் குறித்து கருத்து வெளியிட்ட அவர் ”இது புதிய அனுபவமாக இருக்கின்றது. பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியின் முகாமைத்துவம் எனது பங்களிப்பு நான்காம் விக்கெட்டுக்காக தேவை என்று வேண்டிக்கொண்டதற்கு அமையவே தான் 4ஆம் இலக்கத்தில் ஆடுகின்றேன்” என குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கை அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தனுஷ்க குணத்திலக்க சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை காண்பிக்கவில்லை. இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ”என்னால் முடியுமான சிறந்த ஒரு இன்னிங்ஸை வழங்கவே முயற்சிக்கிறேன். எனினும், அது சிறந்த முறையில் நடக்கவில்லை. எதிர்வரும் போட்டிகளில் தனது புதிய துடுப்பாட்ட தானத்தில் அரைச்சதம் ஒன்றினை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<