சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின்  முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மோதல் எதிர்வரும் 8ஆம் திகதி ஓவல் அரங்கில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி குறித்த பலரது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில் பலரும் இவ்வாட்டம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான ஆரம்பப் போட்டியில் வெற்றி வாய்ப்பினை தவறவிட்ட நிலையில், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமானால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுடனான போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது.

>> பூரண உடற்தகுதியுடன் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்கும் அஞ்செலோ மெதிவ்ஸ்

அதேபோன்று, குறித்த நேரத்திற்குள் பந்து வீசத் தவறிய காரணத்திற்காக இரண்டு போட்டித் தடைகளை எதிர்கொண்டுள்ளார் தற்காலிக அணித் தலைவர் உபுல் தரங்க. எனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான போட்டியில் விளையாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அதுபோன்றே, காயமடைந்து முதல் ஆட்டத்தில் விளையாடாமல் இருந்த அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அவரது பங்களிப்பு முழுமையாக அணிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறான கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை அணி அடுத்த போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது.  

இந்நிலையில், தற்பொழுது இங்கிலாந்தில் போட்டி வர்ணனைகளை வழங்கி வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தற்போதைய இலங்கை அணிக்கு சில அறிவுரைகளைக் கூறியுள்ளார். Thisara perera

அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் விளையாடவில்லையெனில், இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு இந்தியாவுடன் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள சங்கக்கார, அஞ்செலோ மெதிவ்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டாலும், ஏனைய வீரர்களது பங்களிப்பும் மிகவும் முக்கியம் என வலியுறுதித்தியுள்ளார்.

தரங்கவின் நிலை குறித்து குறிப்பிடும்பொழுது, அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க இரண்டு போட்டிகளுக்கு தடை செய்யப்பட்டமை இலங்கை அணிக்கு பெரும் இழப்பு. அதேநேரம் மூத்த  மற்றும் அனுபவம் மிக்க லசித் மாலிங்க இரண்டு சூழல் பந்து வீச்சாளர்களுடன் குறித்த நேரத்தை விட மேலதிகமாக 39 நிமிடங்களை எடுத்துக்கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

>> அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா

இவ்வாறான ஒரு நிலை இதன் பின்னர் இடம்பெறாமல், அணித் தலைவர் மாத்திரமன்றி, மூத்த பந்து வீச்சாளர்களும் இதற்கான பொறுப்பை எடுத்து நிலைமையை சரி செய்ய வேண்டும். அது போன்றே, விக்கெட் காப்பாளர் மற்றும் களத்தடுப்பு வீரர்களும் தடங்கல் இல்லாமல் விரைவாக பந்து வீசுவதற்கான பங்களிப்புகளை வழங்க வேண்டும் எனவும் சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.   

கடந்த போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து குறிப்பிட்ட சங்கா, வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சிரத்துடன் பந்து வீசியதை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக நுவான் பிரதீப் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தி அச்சுறுத்தும் விதத்தில் பந்து வீசியிருந்தார்.

எனினும், முதல் 10 ஓவர்களுக்குள் எவ்விதமான விக்கெட்டுகளையும் கைப்பற்றவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில், இந்தியா போன்ற உறுதியான துடுப்பாட்ட வரிசையை கொண்டுள்ள அணிகளை எதிர்கொள்ளும்போது விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது. அல்லது ஓட்டங்களை மலை போல் குவித்து விடுவார்கள் என்றார்.

இந்நிலையில் திசார பெரேரா போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களை சீக்குகே பிரசன்ன போன்ற அதிரடி வீரர்களுடன் இணைத்து விடுவது அணிக்கு மேலும் பலவகையில் வலு சேர்க்கும் என்பதையும் குமார் சங்கக்கார சுட்டிக் காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், கிண்ணத்தை கட்டாயம் கைப்பற்றப் போகும் அணி என பலரும் இந்தியாவை எதிர்வு கூறியுள்ள நிலையில், பரம எதிரியான பாகிஸ்தான் அணியை நன்றாகவே கவனித்து அனுப்பிய உற்சாகத்துடன் அவர்கள் இலங்கை அணியை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை நடப்புச் சம்பியனாக  களமிறங்கியுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்ப போட்டியிலேயே உறுதியான இணைப்பாட்டதை வெளிப்படுத்தியமை மற்றும் கடந்த கால போட்டிகளின்போது இந்தியா பெற்ற  வெற்றிகளில் இவர்களுடைய பங்களிப்பு போன்றவற்றை கவனிக்கும்போது இலங்கை அணிக்கு பாரிய சவால் ஓன்று காத்திருக்கின்றது என்பது உறுதி.

Nuwan Pradeepஅத்துடன் ஏனைய துடுப்பாட்ட வீரர்களையும் வழி நடாத்தும் அணித் தலைவர் விராத் கோலியும் ஐ.பி.எல் இன் தொடர் சரிவுகளுக்கு பின்னர் மீண்டெழுந்துள்ளமை இலங்கைக்கு மேலும் அச்சுறுத்தும் உணர்வை கொடுக்கின்றது.

எவ்வாறெனினும், இந்திய அணியை தெரிவு செய்யும் பாரிய பங்கு விராத் கோலியிடம் உள்ளது. அத்துடன் பல்வேறுப்பட்ட தெரிவுகளுக்கு மத்தியில்,  எவ்வாறான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அணியின் வலிமை குறைவதற்கு வாய்ப்பே இல்லையென அடித்துக் கூறலாம்.  

இந்நிலையில், இலங்கைத் தரப்பு மாற்றுத் திட்டங்கள் மற்றும் புதிய வியூகங்களை இந்திய அணிக்கெதிராக வகுக்க வேண்டும். தென்னாபிரிக்க அணிக்கெதிராக வெளிப்படுத்திய சிறந்த பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் நிரோஷன் டிக்வெல்லவின் அதிரடி துடுப்பாட்டம் போன்ற சாதகமான திறமைகளை கருத்தில் கொண்டு மன வலிமையுடன் களமிறங்க வேண்டும்.

இலங்கை அணி குறித்து இறுதியாகக் கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார, இந்த இளம் இலங்கை அணி களத்துக்கு சென்று சுதந்திரமாக தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை சாதகமான முறையில் வெளிப்படுத்தி ஆக்ரோஷமாக ஆடினால் அவர்களால் இந்திய அணியை வெற்றிகொள்ள முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக உள்ளது. எனினும் அது அவ்வளவு எளிதானதல்ல எனக் குறிப்பிட்டார்.