சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து அவுஸ்திரேலிய அணியை வெளியேற்றிய இங்கிலாந்து

508
England vs Australia

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைக்க வேண்டிய தீர்மானமிக்க சூழ்நிலையில், களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு மழை காரணமாக இங்கிலாந்து அணியுடனான போட்டியிலும் டக்வத் லூவிஸ் முறைப்படி 40 ஓட்டங்களால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதனால் அவ்வணி தொடரிலிருந்து வெளியேறிய அதேவேளை, நியூசிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 

நியூசிலாந்து அணியின் சம்பியன்ஸ் கிண்ண கனவை தகர்த்த பங்களாதேஷ்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது. அதற்கமைய துடுப்பாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்ட அதேவேளை சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். துரதிஷ்டவசமாக 21 ஓட்டங்களை டேவிட் வோர்னர் பெற்றிருந்த நிலையில் மார்க் வூட்டின் பந்து வீச்சில் ஜொஸ் பட்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஆரோன் பிஞ்சுடன் இணைந்து கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை மேலும் வலுப்படுத்தினார். அரைச் சதங்களைக் கடந்த இவ்விருவரும் துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில் சதம் பெற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு காணப்பட்ட போதிலும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வூட் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சின் மூலம் அடுத்தடுத்து வெளியேறினர்.

ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட ட்ராவிஸ் ஹெட் மற்றும் க்லென் மெக்ஸ்வெல் ஆகியோர் பெறுமதிமிக்க 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். க்லென் மெக்ஸ்வெல் 20 ஓட்டங்களையும், அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 71 ஓட்டங்களையும் பதிவு செய்தனர். தொடர்ந்து களமிறங்கிய பின்கள வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறியதால் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

தொடர்ந்து குறித்த வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வெறும் 6 ஓட்டங்களுக்கு வீழ்த்தி அவுஸ்திரேலியா அதிர்ச்சியளித்தது. ஜேசன் ரோய் 4 ஓட்டங்களுக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓட்டமெதுவும் பெறாமாலே ஓய்வறை திரும்பினர். அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணிக்கு போட்டியை வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.

இக்கட்டான சூழ்நிலையில், தொடர்ந்து களமிறங்கிய இயன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து நான்காம் விக்கெட்டுகாக 159 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியை வலுப்படுத்தினர். எனினும் துரதிஷ்டவசமாக 87 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை இயன் மோர்கன் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

[rev_slider ct17-dsccricket]

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்சுடன் இணைந்து ஓட்டங்களை அதிரடியாக குவிக்கத் தொடங்கினார். சிறப்பாக துடுப்பாடிய பென் ஸ்டோக்ஸ் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 102 ஓட்டங்களை பெற்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தினை பூர்த்தி செய்தார்.

எனினும், இங்கிலாந்து அணி 40.2ஆவது ஓவரின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்தும், போட்டியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படாததால் டக்வத் லூவிஸ் முறைப்படி 40 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.    

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 277/9 (50) – ட்ராரேஸ் ஹெட் 71, ஆரோன் பிஞ்ச் 68, ஸ்டீவன் ஸ்மித் 56, டேவிட் வோர்னர் 21, க்லென் மெக்ஸ்வெல் 20, மார்க் வூட் 33/4, ஆதில் ரஷித் 41/4

இங்கிலாந்து – 240/4 (40.2) – பென் ஸ்டோக்ஸ் 102*, இயன் மோர்கன் 87, ஜொஸ் பட்லர் 29*   

முடிவு – இங்கிலாந்து அணி 40 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறை)