சென்னை அணியுடன் இணைந்தார் ருதுராஜ் கெய்க்வாட்

195

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து, பயிற்சிக்கு திரும்பியுள்ளார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளிலும், அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னரே, இவர் சென்னை அணியின் உயிர் பாதுகாப்பு வலையத்துக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

>>அஷ்வின் IPL தொடரில் நீடிப்பது சந்தேகம்<<

சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், உடனடியாக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், இவர்களுடன் நெருங்கி பழகிய வீரர்கள் உட்பட ஊழியர்கள் 11 பேர் டுபாயில் தனிமைப்படுத்தப்பட்டனர்

எனினும், தீபக் சஹார் உட்பட ஏனைய 11 பேரும் கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து அணியின் உயிர் பாதுகாப்பு வலையத்துக்குள் இணைக்கப்பட்டனர். இதில், இறுதியாக ருதுராஜ் கெய்க்வாட் மாத்திரமே கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கடந்த 15ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், இவருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட போதும், மேலதிகமாக 2 பரிசோதனைகள் இருந்த காரணத்தினால், அவர் அணியுடன் இணைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முழுமையாக குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட், மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளமையை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

>>Video – பங்களாதேஷ் – இலங்கை மற்றும் LPL தொடர்கள் நடைபெறுவதில் சந்தேகம்? | Cricket Kalam 46<<

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான சுரேஸ் ரெய்னா அணியிலிருந்து வெளியேறிய நிலையில், அவரின் இடத்துக்கு இளம் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக முரளி விஜய் களமிறக்கப்பட்டதுடன், சுரேஸ் ரெய்னாவின் இடத்தில், அம்பத்தி ராயுடு களமிறங்கி அணியின் வெற்றிக்கு காரணமாகியிருந்தார்.

அதேநேரம், ருதுராஜ் கெய்க்வாட் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான அடுத்தப் போட்டியில் விளையாடுவதில், சந்தேகம் நிலவுவதுடன், அதற்கு அடுத்தப் போட்டியிலிருந்து நிச்சயமாக அணி தெரிவு வீரர்களில் உள்வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<