சூரியவெவ மைதானத்தில் பணியாளர்களின் காற்சட்டைகளை அகற்றிய அதிகாரிகள்

758
Stadium labourers stripped
@REUTERS

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்று (10) நடைபெற்ற 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் பின்னர் சூரியவெவ மைதானத்தில் தற்காலிகமாக கடமை புரிந்த பணியாளர்களின் ஆடைகள் (காற்சட்டை) மீண்டும் பெற்றுக்கொள்ப்பட்டதாகவும், இதன் காரணமாக அப்பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்காக ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்திற்கு அந்த பிரதேசத்தில் உள்ள 100 இளைஞர்களுக்கும் அதிகமானவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மழையின் போது உறைகளைக் கொண்டு மைதானத்தை மூடுவதே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பாகும்.

எனினும், போட்டியின் இறுதியில் அந்த பணியாளர்கள் தமது நாளாந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள சென்றபோது அங்கிருந்த மைதான பொறுப்பாளர் பணியாளர்கள் அணிந்திருந்த கிரிக்கெட் நிறுவனத்தின் சின்னத்துடனான காற்சட்டைகளைப் பெற்ற பின்னரே, ஊழியர்களின் சம்பளத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக பணியாற்றிய பணியாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி

ஜிம்பாப்வேயிடமும் தொடர் தோல்வியை சந்தித்த தன் மூலம் இலங்கை அணி…

இது தொடர்பில் மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் 1000 ரூபா நாளாந்த சம்பளத்திற்கு கடந்த 6 தினங்களாக பணி புரிந்தோம். போட்டியின் இறுதி நாளான நேற்று நாங்கள் சம்பளத்தை எடுக்கச் சென்றபோது அணிந்திருந்த காற்சட்டையை கழற்றித் தரும்படி சொன்னார்கள். உண்மையில் நாங்கள் பிரத்தியேகமாக எந்தவொரு ஆடையையும் கொண்டு வரவில்லை. முன்னதாக அறிவித்திருந்தால் நாம் கொண்டு வந்திருப்போம். எனவே காற்சட்டையை தராவிட்டால் சம்பளம் வழங்கப்படமாட்டாது என தெரிவித்த காரணத்தால் பெரும்பாலானோர் காற்சட்டையை கழற்றிக் கொடுத்துவிட்டு உள்ளாடைகளுடன், அதிலும் குறிப்பாக நள்ளிரவில்தான் வீட்டுக்குச் சென்றோம்” என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் சூரியவெவ மைதானத்தின் பிரதான அதிகாரி கருத்து தெரிவிக்கையில், ”இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தரவிற்கமையவே இவ்வாறு செய்தேன்” என தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி மைதான அதிகாரிகளால், சூரியவெவ மைதானத்தில் தற்காலிகமாக கடமை புரிந்த பணியாளர்களுக்கு சந்திக்க நேரிட்ட அசௌகரியத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.