இலங்கை அணியை நேரடியாக பாதிக்கும் ICCயின் புதிய அறிவிப்பு

179
Sri Lanka won’t retain automatic A1 seeding

ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்றுக்கான தகுதிபெறும் விதிமுறையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த மாற்றம் நேரடியாக இலங்கை அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்த சுப்பர் 12 தகுதிபெறும் விதிமுறையில், இலங்கை அணி முதல் சுற்றின் குழு Aயில் முதலிடத்தை பிடித்தாலும், இரண்டாவது இடத்தை பிடித்தாலும், சுப்பர் 12 சுற்றில் A1 அணியாக கணிக்கப்படும். எனவே, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் உள்ள குழு ஒன்றில் மாத்திரமே போட்டியிடும்.

>> இலங்கையின் மத்திய வரிசையை மாற்றிய மஹேல

அதேநேரம், பங்களாதேஷ் அணி முதல் சுற்றின் குழு Bயில் முதலிரண்டு இடங்களில், எந்த இடத்தை பிடித்தாலும், B1 அணியாக கணிக்கப்பட்டு, சுப்பர் 12 சுற்றில் குழு இரண்டில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோதும் வகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தகுதிபெறும் முறையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், முதல் சுற்றில் ஸ்கொட்லாந்து அணி, பங்களாதேஷ் அணியை வீழ்த்தியதன் காரணமாக, தகுதிபெறும் விதிமுறையில், ஐசிசி திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையின் படி, குழு Aயில் முதலிடத்தை பிடிக்கும் அணி, சுப்பர் 12 சுற்றில் குழு ஒன்றுக்கும், குழு Aயில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி, சுப்பர் 12 சுற்றின் குழு இரண்டிலும் இடம்பிடிக்கும்.

அதேபோன்று, முதல் சுற்றின் குழு Bயில், முதலிடத்தை பிடிக்கும் அணி, குழு இரண்டுக்கும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி குழு ஒன்றுக்கும் தகுதிபெறும்.

எனவே, இலங்கை அணி முதல் சுற்றின், குழு Aயில், முதல் இடத்தை பிடிக்குமானால், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இடம்பெற்றுள்ள குழு ஒன்றில் இடத்தை பிடித்துக்கொள்ளும். ஆனால், முதல் சுற்றின் குழு Aயில், இரண்டாவது இடத்தை பிடிக்குமானால், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ள குழு இரண்டில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய நிலையில், இலங்கை அணி முதல் சுற்றின் குழு Aயில், முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தநிலையில், தங்களுடைய இரண்டாவது போட்டியில், அயர்லாந்து அணியை இன்றைய தினம் (20) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க