நிறுவனரீதியான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை இராஜினாமா செய்துள்ளது.
ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை நிறுவனரீதியான இனவாதத்தை வெளிப்படுத்திவருவதாக, சுதந்திர விசாரணை அறிக்கையொன்றில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
>> SLC இன் புனர்வாழ்வு திட்டத்தை புறக்கணித்த குசல் பெரேரா
குறித்த இந்த விசாரணை அறிக்கை நேற்றைய தினம் (25) வெளியாகியிருந்த நிலையில், இதற்கு முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபையின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி கோர்டன் ஆர்தர் மற்றும் கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை இராஜினமா செய்துள்ளனர்.
கடந்த 2015 உலகக் கிண்ணத்தின் போது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதுடன், பின்னர் மீண்டும் விளையாடாத முன்னாள் ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர் மஜித் ஹக் இனவாத ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதேநேரம், முன்னாள் வீரர் கசீம் ஷெய்க் மற்றும் அஷீம் ரபீக் ஆகியோரும் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபையின் நிறுவன ரீதியான இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில், ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபையின் நிறுவனரீதியான இனவாத செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்த ஸ்காட்லாந்தின் தேசிய விளையாட்டு நிறுவனமான Plan4Sport, ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை நிறுவன ரீதியான இனவெறி தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபையை சார்ந்த 1000 பேரிடம் எடுக்கப்பட்ட வாக்குமூலங்களின் மூலம், 15 வெவ்வேறு நபர்கள், இரண்டு கழகங்கள் மற்றும் ஒரு பிராந்திய கிரிக்கெட் சபைகளுக்கு எதிரான 31 இனவெறி குற்றச்சாட்டுகள் உட்பட, மேலதிக விசாரணைக்கு 68 தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கிரிக்கெட் சபைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவி விலகியிருந்த ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபையின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி கோர்டன் ஆதர் குறிப்பிடுகையில்,
“நாம் அனைவரும் உண்மையிலேயே வருந்துகிறோம், ஸ்காட்லாந்து கிரிக்கெட்டில் இனவெறி அல்லது வேறு எந்த வகையான பாகுபாடுகளையும் அனுபவித்த அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றோம். இது சந்தேகத்திற்கு இடமின்றி, எதிர்காலத்தில் அதன் தொடர்ச்சியான வெற்றியை உறுதி செய்வதற்காக விளையாட்டின் நிர்வாகத்தை மாற்றியமைத்து நவீனமயமாக்குவதற்கான மற்றொரு நீண்ட பயணத்தின் தொடக்கமாகும்” என்றார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<