ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவுக்கு வெளியில் நடக்கும் சாத்தியம்?

1337

இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 கிரிக்கெட் தொடரை வேறு நாடு ஒன்றில்  நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

ஐ.பி.எல். தொடர் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் மே 27ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்ட போதும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காலவரையின்றி அது பிற்போடப்பட்டிருந்தது.  

4000 கோடி நஷ்டத்தை சந்திக்குமா BCCI??

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் நடைபெறாது போனால்

இதேநேரம், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை நடாத்தாமல் போனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு வரலாறு காணாத பாரிய நஷ்டம் ஒன்று ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.  

எனினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆபத்து இன்னும் முழுமையாக குறையாததன் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை இந்திய மண்ணில் செப்டம்பர் மாதம் நடாத்துவதிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. 

விடயங்கள் இவ்வாறு இருக்க, வேறு வழிகள் சாத்தியமில்லாமல் போகும் சந்தர்ப்பம் ஒன்றின் போது இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாட்டில் நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  

T20 உலகக் கிண்ணம் தொடர்பில் ஐசிசி புதிய அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த ஐசிசி T20 உலகக் கிண்ணம்

”எமது வீரர்களுக்கு இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை விளையாடுவது பாதுகாப்பு என்றால், அதுவே எமது முதல் தெரிவாக இருக்கும். ஆனால், சந்தர்ப்பம் இடம்கொடுக்காது போனால் எங்களுக்கு வேறு தெரிவுகள் இருக்காது. அதோடு, நாம் 2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவிற்கு வெளியிலும் நடாத்த ஆலோசிக்கின்றோம்.” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொருளாளர் அரூண் துமால் டைம்ஸ் நவ் செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார். 

அதேநேரம், சில சிக்கலான நிலைமைகளின் போது கடந்த ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற சம்பவங்கள் பதிவாகின. 

மறுமுனையில், கடந்த மாதம் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை இலங்கையில் நடாத்த வேண்டுகோள் ஒன்றை விடுத்து அது மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியமும் தமது நாட்டில் ஐ.பி.எல். போட்டிகளை நடாத்த விருப்பம் காட்டியிருந்தது.   

எனினும், இலங்கையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை இந்திய வீரர்களை மாத்திரம் வைத்து நடாத்துவதற்கு அவுஸ்திரேலிய முன்னாள் வீரரான மெத்திவ் ஹெய்டன் போன்றோர் ஆதரவு வழங்கிய நிலையில், ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளை நடாத்த வாய்ப்பு மறுக்கப்பட்ட இலங்கையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானிக்க ஆலோசனைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது. 

ஆனால், இந்த விடயங்கள் தொடர்பில் முடிவு ஒன்றினை எடுக்க இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொருளாளர் அருண் துமால் மேலும் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருக்கின்றார்.    

”நாங்கள் இதனை (ஐ.பி.எல். போட்டிகளை) தென்னாபிரிக்காவில் நடாத்தியிருக்கின்றோம். அது நாங்கள் விரும்பி செய்தது அல்ல. ஆனால், வாய்ப்பு வேறு இல்லை என்றால், யாராலும் எதனையும் செய்ய முடியாது.”  

”இப்போது கொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து எந்த நாடுமே தப்பிக்கவில்லை. எனவே, ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்வதும், வீரர்களை இலங்கை, துபாய் அல்லது தென்னாபிரிக்கா போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்வதும் இலகுவாக இருக்காது. இப்போது (நிலைமைகள்) எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. அதோடு, நாடுகளுக்கிடையிலான சர்வதேச போக்குவரத்தும் சிக்கலாக காணப்படுகின்றது. (ஐ.பி.எல். போட்டிகளுக்காக) இலங்கை பொருத்தமாக இருந்த போதும் கடந்த ஓரிரு நாட்களில் அங்கும் நோயாளர்கள் அதிகரித்துள்ளனர். ஆக, பிரச்சினை இருக்கின்றது. நாம் அதனை சமாளிக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம்.” என்றார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<