பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் 28 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

234
Courtesy - Ministry of Sports

எதிர்வரும் 23ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளின் பஹாமாஸ் தீவுகளில் நடைபெறவுள்ள 6ஆவது பொதுநலவாய நாடுகளின் இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 28 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடைபெறுகின்ற இப்போட்டித் தொடரில் 9 வகையான விளையாட்டுகள் உள்ளடங்கியுள்ளன. மெய்வல்லுனர், நீச்சல், குத்துச்சண்டை, டென்னிஸ், ஜுடோ மற்றும் அணிக்கு எழுவர் கொண்ட றக்பி கிண்ணம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பாக வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், எரந்திக குணவர்தன தலைமையிலான 9 அதிகாரிகளையும் கொண்ட இலங்கை அணி கடந்த சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தப் பொட்டிகள் அனைத்தும் இன்று முதல் இளையோர் பொதுநலவாய விளையாட்டு விழா கிராமத்தில் இடம்பெறவுள்ளன.

ஜுடோவில் இரு வீரர்கள்

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஜுடோ விளையாட்டில் பெரும்பாலான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இலங்கை சார்பாக 2 வீரர்கள் பங்கேற்கவுள்ளதுடன், ஆண்கள் பிரிவில் சூரிய துஷார கஸ்தூரி ஆரச்சியும், பெண்கள் பிரிவில் ஹப்சா யாமினாவும் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

மெய்வல்லுனர் குழாம்

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட தகுதிகாண் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்த வீரர்களுக்கு இம்முறை இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. இவ்வீரர்கள் அனைவரும் பொதுநலவாய போட்டிகளுக்கான அடைவு மட்டத்தை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் புதிய சாதனை படைத்த மருதானை புனித ஜோசப் கல்லூரியின் ஹேஷான் காரியவசம், ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் நவோத்ய சங்கல்ப (காலி மஹிந்த கல்லூரி), ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ப்ரமோத மதுபாஷ (நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி), பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் சச்சினி தாரகா திவ்யாங்ஞலி (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் சந்துமினி பண்டார (கேகாலை ஜோசப் மகளிர் கல்லூரி) மற்றும் கவிது தத்சரணி (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை) ஆகியோர் மெய்வல்லுனர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை மெய்வல்லுனர் அணியின் முன்னாள் வீரரும், 400 மீற்றர் சம்பியனுமாகிய அமில பிரசன்ன சம்பத்திடம் பயிற்சிகளைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், இலங்கை மெய்வல்லுனர் குழாமின் பயிற்சியாளராக அல்விஸ் வீரசேகர செயற்படவுள்ளார்.

முதற்டவையாக களமிறங்கும் றக்பி அணி

இலங்கை இளையோர் றக்பி அணியும் முதற்தடவையாக பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. இதன்படி றக்பி போட்டிகள் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இலங்கை றக்பி அணி விபரம்: துலாஞ்சல பியதிஸ்ஸ (தர்மராஜ கல்லூரி), கிறிஸ்டியன் டி லிலி(புனித தோமியர் கல்லூரி), கெமுனு சேதிய குமாரசிங்க(புனித ஜோசப் கல்லூரி), இஷார லியனகே(புனித அன்தோனியார் கல்லூரி), ஜொனதன் வோரன் வீரகோன்(திருத்துவக் கல்லூரி), சபீர் இக்பால்(புனித அன்தோனியார் கல்லூரி), நதீஷ சமின்த விதானகே(இசிபதன கல்லூரி), நவீன் ராஜரத்னம்(திருத்துவக் கல்லூரி), ரவீன் பெர்ணாந்து(புனித பேதுரு கல்லூரி), தரிந்து அநுராத அல்விஸ்(புனித ஜோசப் கல்லூரி), டயான் சாபர்(வெஸ்லி கல்லூரி) மற்றும் விஷ்வ ரணராஜா(திருத்துவக் கல்லூரி).

இலங்கை அணிக்கு பீடர் ஜோர்ஜ் வூட் பயிற்சியாளராகவும், எம். மரிக்கார் முகாமையாளராகவும், தாரக அஹங்கம உடற்பயிற்சியாளராகவும் செயற்படுகின்றனர்.  

இந்நிலையில், முன்னாள் ஒலிம்பிக் வீரரான ஜுலியன் போலிங் பயிற்சியாளராக உள்ள இலங்கை நீச்சல் அணியில் அகலங்க பீரிஸ், கைல் அபேசிங்க, அவன்தி தேவ்மினி மற்றும் வினோலி களுஆரச்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

பாரதி ஜோர்ஜ் பிள்ளை பயிற்சியாளராக உள்ள இலங்கை டென்னிஸ் அணியில் விபூத இன்தீப விஜேபண்டார மற்றும் அனீதா செனவிரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குத்துச்சண்டை அணியில் கவின்த சன்ஞய பண்டார மற்றும் மதுமாலி எரங்கா பிரியதர்ஸனி ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், அந்த அணியின் பயிற்றுனராக கே.கே சுனில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு சமோவா தீவுகளில் நடைபெற்ற பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கை அணி 4 வெள்ளிப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டது. 6ஆவது தடவையாக நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் 54 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,300 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.